வெளிநாட்டு பயணங்களில் பிரதமர் மோடியுடன் இருக்கும் பெண்மணி யார்?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களின் போது அவருடன் இருக்கும் பெண்மணி யார்? அவரின் பணி என்ன என்பது குறித்து இந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய காரணங்களுக்காகவும், பல்வேறு திட்டங்களை விவாதிக்க மற்றும் விவரிப்பதற்காகவும், சில சமயங்களில் தலைவர்களை சந்திப்பதற்காகவும், பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    
இவ்வாறு ஒவ்வொரு முறை பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதும், முக்கிய ஆலோசனைகள் போதும், அவருடன் பெண்மணி ஒருவர் இருப்பதை பார்க்கிறோம், அவர் பெயர் குர்தீப் கவுர் சாவ்லா(Gurdeep Kaur Chawla).

இவர் அமெரிக்காவில் வெற்றிகரமான தொழிலதிபராக திகழ்ந்து வந்தவர், அதே சமயம் இவர் சிறந்த மொழிப்பெயர்பாளராகவும் அறியப்படுகிறார். இவர் பிரதமரின் உரையை மொழிப்பெயர்ப்பதுடன், பல்வேறு சமயங்களில் அவற்றை தலைவர்களுக்கு விளக்கவும் செய்கிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகால விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு அனுபவம் கொண்ட குர்தீப் கவுர் சாவ்லா, பாரதிய பாஷா சேவா LLP இன் இயக்குனராக உள்ளார்.

டெல்லி, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் முதுகலை ஆங்கில பட்டம் பெற்றதுடன், அரசியல் அறிவியல் பாடத்திலும் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் குர்தீப் கவுர் சாவ்லா இந்திய நாடாளுமன்றம், கலிபோர்னியா நீதித்துறை கவுன்சில் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆகியவற்றில் முனைவர் (Ph.D) பயிற்சி பெற்றுள்ளார்.

குர்தீப் கவுர் சாவ்லா 1990ல் தன்னுடைய 21வது வயதில் இந்திய நாடாளுமன்றத்தில் படிக்காவதர்களுக்காக மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கம் அளிக்கும் நபராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின் அவருடைய கணவருக்கு வேலை மாற்று அளிக்கப்பட்டதை தொடர்ந்து குர்தீப் கவுர் சாவ்லா அமெரிக்காவுக்கு சென்று வெற்றிகரமான தொழிலதிபராக உருவெடுத்தார்.

குர்தீப் கவுர் சாவ்லா-வின் முக்கியமான பணி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களின் போது அவரது உரையை ஹிந்தி மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்து தலைவர்களுக்கு வழங்குவது ஆகும். அமெரிக்க அதிபர்கள் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கும் போது குர்தீப் கவுர் சாவ்லா எப்போதும் உடன் இருந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதல் முறையாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்காக இந்தியா வந்த போது குர்தீப் கவுர் சாவ்லா உடன் இருந்தார். 2015 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பாரக் ஒபாமா ஆற்றிய உரையை குர்தீப் கவுர் சாவ்லா மொழிபெயர்த்து விளக்கினார்.

மேலும் கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முக்கிய ஆலோசனை கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளில் குர்தீப் கவுர் சாவ்லா நிச்சயம் இடம் பெற்று இருப்பார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!