நிலவை ‘இந்து நாடாக’ அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு சாமியார் வேண்டுகோள்!

நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
    
அதன்படி, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு மாலை சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என்ற பெயர் வைத்தார். இந்நிலையில் நிலவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று அகில இந்திய இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரபாணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”நிலவை இந்து ராஷ்டிராவாக நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும். சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய ‘சிவசக்தி பாயிண்டை’ அதன் தலைநகராக அறிவிக்க வேண்டும். எந்தப் பயங்கரவாதிகளும் அந்த இடத்திற்கு செல்லமுடியாதபடி இந்திய அரசு விரைவாகச் செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!