இளம் வயதில் இந்திய சிறுமி படைக்கும் சாதனை!

இந்திய மாநிலம், பஞ்சாபை சேர்ந்த சிறுமி ஒருவர் இளம்வயதில் தொடர்ந்து மலை ஏறி சாதனை படைத்து வருகிறார். பல விளையாட்டுகளுக்கு மத்தியில் சிலர் மட்டுமே மற்ற செயல்கள் மூலம் தனித்துவம் பெறுவார்கள். அந்தவகையில், மலையேறுவதில் தனித்துவம் பெற்றவர் தான் இந்த சிறுமி.
    
பஞ்சாப் மாநிலம் ரூப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் சூத். இவரது மகள், சான்வி என்ற சிறுமி தான் மலை ஏறுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். சமீபத்தில், ரஷியாவில் 5,642 மீட்டர் உயரத்தில் உள்ள எல்பரஸ் சிகரத்தில் சிறுமி சான்வி ஏறினார். இதனால், இளம் வயதில் எல்பரஸ் சிகரத்தை ஏறிய சிறுமி என்ற சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு, எவரெஸ்ட் மலை சிகரத்திலும் ஏறி இந்தியக் கொடியை அசைத்துள்ளார். இதன் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் இளம் வயதில் ஏறிய சிறுமி என்ற சாதனையும் படைத்திருந்தார்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தென்னாப்பிரிக்காவில் உள்ள 5,895 மீட்டர் உயரத்தில் உள்ள கிளிமாஞ்சாரோ சிகரத்திலும், கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவில் 2,228 மீட்டர் உயரம் உள்ள கோஸ்சியூஸ்கோ சிகரத்திலும் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இளம் வயதில் மலை ஏறி சாதனை படைக்கும் சான்விக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சான்வியின் சிறந்த பங்களிப்பிற்காக சுதந்திர தினத்தன்று மாநில விருது வழங்கி கவுரவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!