உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ – சீக்கியர் மீது அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்

அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய நபர்கள், அவரை இந்தியாவிற்கு திரும்பி போகும்படி மிரட்டி உள்ளனர்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மீது சமீபகாலமாக இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீக்கியர்கள் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். முஸ்லிம் என நினைத்து சீக்கியர்களை தாக்கி அவமதிக்கின்றனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவில் வசித்து வரும் 50 வயது நிரம்பிய சீக்கியர் ஒருவர் மீது 2 வெள்ளையின நபர்கள் இனவெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவரை கடுமையாக தாக்கி கீழே தள்ளியதுடன், ‘உன்னை யாரும் இங்கே வரவேற்கவில்லை, உன்னுடைய நாட்டிற்கு திரும்பி போ’ என்றும் அந்த நபர்கள் மிரட்டியுள்ளனர். அத்துடன் அவரது வாகனம் மீது பெயிண்டை ஸ்பிரே செய்துள்ளனர். காயமடைந்த சீக்கியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

கடந்த வாரம் கேயாஸ் மற்றும் பூட்டே சாலை சந்திப்பின் அருகே உள்ளூர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!