குகையில் இருந்து மீட்கப்பட்ட 3 சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கிய தாய்லாந்து அரசு

தாய்லாந்தில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு அந்நாட்டு அரசு குடியுரிமையை வழங்கியுள்ளது.

தாய்லாந்தில் குகையில் சிக்கி தவித்த சிறுவர்கள் 12 பேர், அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர், கடந்த ஜூலை 10-ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

18 நாள்கள் நடைபெற்ற மிகப்பெரும் போராட்டத்துக்குப் பிறகு, உயிருடன் அவர்கள் மீட்கப்பட்டனர். இந்த மீட்புப்பணிகள், உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சிறுவர்கள் குகையில் சிக்கியதும், அவர்களுக்காக நடைபெற்ற மீட்புப்பணிகளும் இந்த ஆண்டில் நடைபெற்ற மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்களில் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்த அகதிகள் என்பதால் அவர்களுக்கு தாய்லாந்து குடியுரிமை இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், சிறுவர்கள் மூன்று பேர் மற்றும் பயிற்சியாளருக்கு தாய்லாந்து அரசு குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

இதனை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம், ’சிறுவர்களுக்கு குடியுரிமை வழங்கியதன் மூலம் தாய்லாந்து அரசு அவர்களுக்கு முறையான அடையாளத்தை வழங்கியுள்ளது. தற்போது சமூகத்தின் முழு உறுப்பினராக இருந்தவாறு அவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும்’ என தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!