நாட்டின் பொருளாதாரம் உயரும் போது எப்படி வேலை வாய்ப்புகள் உயராமல் போகும்? – பிரதமர் மோடி

JAPAN-INDIA/
அம்பேத்கரின் கனவுகள் இன்னும் நிறைவேறவில்லை. அதுவரை இட ஒதுக்கீடு நிச்சயம் இருக்கும் எனப் பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். ஜி.எஸ்.டி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு என எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பின்மை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “இது தொடர்பாக ஏற்கெனவே நான் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது விரிவாகப் பேசினேன். மீண்டும் சொல்கிறேன், நாட்டின் பொருளாதாரம் உயரும் போது எப்படி வேலை வாய்ப்புகள் உயராமல் போகும்? புதிய சாலைகள், புதிய மின்சார திட்டங்கள், புதிய ரயில் பாதைகள் என உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படும் போது வேலை வாய்ப்பு கிடைக்க தான் செய்யும். புதிய தொழில்கள் தொடங்குவதில் இந்தியா முதன்மையாக உள்ளது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்காதா? புதிதாக தொழில் தொடங்க சுமார் 13 கோடி முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 3.5 கோடி கடன்கள் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது வேலைவாய்ப்புகளை உருவாக்காதா? இவை அனைத்தும் வெறும் எடுத்துக்காட்டுகள் தான். இவை அனைத்தும் கடந்த ஓராண்டு மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதனால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்ற பிரசாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் காலம் வந்துவிட்டது” எனப் பதிலளித்தார்.

ஜி.எஸ்.டி விவகாரத்தில் மாநில முதல்வராக இருந்த போது எதிர்த்த நீங்கள் பிரதமர் ஆனதும் அதையே செயல்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர் என்ற கேள்விக்கு, “ஜி.எஸ்.டி விவகாரத்தில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் நிதி அமைச்சர் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்கிற மாதிரி மாநிலங்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் செயல்பட்டார். அப்போது குஜராத் மட்டுமல்ல, பல மாநிலங்கள் இதை எதிர்த்தது. நாங்கள் கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரியை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டது . காரணம் நாங்கள் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு, அதன்படி செயல்பட்டோம். இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை நாங்கள் வழங்குவதாகத் தெரிவித்தோம். இதனால் அவர்கள் எங்களை நம்பினார்கள். ஏன் இன்னும் நான் மாற்றிப் பேசுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட வேண்டும். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை கிடைத்தால் மாறுவதில் தவறு இல்லை தானே? நான் எதைக் கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என எதிர்க்கிறார்கள். யோகா, தூய்மை இந்தியா, ஸர்ஜிகல் ஸ்ட்ரைக் என எதைக் செய்தலும் எதிர்ப்பார்கள். ஜி.எஸ்.டி வரியால் சூரத் வியாபாரிகள் பாதிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசினார். அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஏன் அவர்களைப் புறக்கணித்தார்கள்? மக்கள் முழுமனதாக ஜி.எஸ்.டி முறையை ஏற்றுக்கொண்டனர். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் 66 லட்சம். ஆனால், ஜி,எஸ்.டி கொண்டு வந்த பின்னர் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 48 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன? இந்த அரசாங்கம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய சரியான நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாகக் கூறப்படுவது உண்மையா என்ற கேள்விக்கு, ”இந்திய அரசியலமைப்பு மற்றும் பாபாசாகேப் அம்பேத்கரின் நோக்கங்கள் இன்னும் முழுமையடையவில்லை. அவரது கனவுகள் நிறைவேற்றுவது நம் அனைவரது கடமையும் கூட. அதனை நிறைவேற்ற இட ஒதுக்கீடு அவசியம். அதுவரை இட ஒதுக்கீடு அமலில் இருக்கும். அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அம்பேத்கரின் கனவுகள் இந்த நாட்டின் பலம். அதனை நிறைவேற்ற நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். முக்கிய தேர்தல் காலத்தில் சிலர் பாஜக இடஒதுகீட்டை ரத்து செய்து விடும் எனப் பரப்புகிறார்கள். சில ஊடகங்ளும் இதனை பூதாகரமாக்கும். இதனைச் செய்பவர்கள் தான் அம்பேத்கரின் கனவுகளை உடைப்பவர்களாக உள்ளனர். அவர்கள் பலவீனமாக சமூகத்தினரிடம் அவநம்பிக்கையை விதைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் புத்திசாலிகள். அதனை நம்பமாட்டார்கள். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி போன்ற பிரிவுகளில் இருந்து அதிகப்படியான எம்.பி, எம்.எல்.ஏ க்கள் கொண்ட கட்சி பாஜக தான்” என்றார்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி நடந்து கொண்ட விதம் குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, “அது குழந்தைத்தனமான ஒன்றா இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை அப்படி முடிவு செய்ய முடியவில்லை என்றால், அவர் கண்சிமிட்டுவதை மீண்டும் பாருங்கள். உங்களுக்கு விடை கிடைக்கும். நான் ஒரு சாதாரண தொழிலாளி. இதில் நான் என்ன சொல்ல?” என்றார்.

மேலும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு, “பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக பெரும் கவனம் கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது இரண்டு பெண் மத்திய அமைச்சர்கள் உள்ளனர். பொருளாதாரத்திலும் பெண்கள் முன்னேற பாஜக பல முயற்சிகள் செய்துள்ளது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் 70% லோன்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முத்தலாக் முறையை ரத்து செய்வதும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பானது தான். புதிய ஹஜ் கொள்கை மூலம் பெண்கள் தனியாகப் புனித யாத்திரை மேற்கோள்ள முடியும். அது அவர்களுக்கான உரிமை” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!