யாழ். வைத்தியசாலையின் சேவை குறித்து பெருமிதம் கொள்கிறோம் – சி.வி.

யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்களுக்குக் கிடைப்பதையிட்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்று வட மகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட தாதிகள் விடுதி மற்றும் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் ‘அரச ஒசுசல’ மருந்தகத் திறப்பு விழா யாழ்.போதனா வைத்தியசாலையின் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தல‍ைமையில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இருதய அறுவை சிகிச்சைகள் இடம்பெறுகின்ற நாடளாவிய அரச வைத்தியசாலைகளில் நான்கில் ஒரு இடத்தை யாழ். போதனா வைத்தியசாலையும் பெற்றுள்ளமை எமது இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் பிரதி உபகாரம் கருதாத சேவை மனப்பாங்கைப் எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இருதய அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்கான விசேடப் படுக்கை வசதிகள் இரண்டை மட்டுமே கொண்டுள்ள போதும் எமது வைத்திய நிபுணர் மிகச் சிறப்பாக இக் குறுகிய வளங்களுடன் சேவையாற்றுவது பாராட்டத்தக்க வேண்டிய விடயம்.

இந் நிலையில் அவ்வாறான சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது இங்கிருக்கும் அறுவைச் சிகிச்சை நிபுணர் நான் பதவிக்கு வந்த பின்னரே இங்கு வந்தார். அவரை மாற்ற வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை.

இரண்டு வருடங்களின் பின்னர் வடக்கு வைத்தியர்களை மாற்றம் செய்யும் பழக்கம் இங்கு போர்க்காலத்தில் அமுலில் இருந்தது. தற்போது அவ்வாறான முறை அவசியமில்லை. எனவே இவ்வாறான நற்சேவை செய்து வருபவர்களை தயவு செய்து தொடர்ந்தும் இங்கு சேவை செய்வதற்கு அனுமதியளியுங்கள். அதுபோன்றே ஏனைய துறைசார் வைத்திய நிபுணர்களும் இங்கு தமது சேவைகளைத் திறம்பட முன்னெடுத்து வருகின்றனர்.

எவ்வாறெனினும் யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்களுக்குக் கிடைப்பதையிட்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைஸல் காசிம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, விஜயகலா மகஸே்வரன், சரவணபவன் மற்றும் சரவணபவன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!