பிடிவிறாந்து பிரதியை இன்டபோல் ஊடாக கோரிய அர்ஜுன் மகேந்திரன்!

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்யுமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்படி பிடிவிறாந்து பிரதி உள்ளிட்ட பல ஆவணங்களை அவர் இன்டர்போலின் ஊடாக கேட்டிருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தது.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணை முறி வழக்கு கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் நாயகமான ஹரிபிரிய ஜயசுந்தர மேற்கூறியவாறு தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள இன்டர்பொல் நிலையத்தின் ஊடாக அவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தின் பிரதியையும் தனக்கு எதிரான சாட்சியத்தின் சுருக்கப் பிரதியையும் அர்ஜுன் மகேந்திரன் கேட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைது செய்யுமாறு ஆங்கிலத்தில் எழுதிய பிடிவிறாந்தினை கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் வெளியிட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத காரணத்தினாலேயே அர்ஜுன் மகேந்திரன் மீது நீதிமன்றம் இவ்வாறு பிடிவிறாந்தினை பிறப்பித்திருந்தது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரான அர்ஜுன் மகேந்திரனை வெளிநாட்டில் இருந்து அழைத்துவர தேவையான சட்ட நடவடிக்கைகளை சி. ஐ. டி. பொலிஸார் எடுத்து வருவதாக மேற்படி வழக்கில் முன்னர் ஒருமுறை சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!