“மனிதப்புதைகுழி விவகாரம் மூலம் காணாமல்போனோர் விடயத்தில் விடைகாண முடியும்”

காணாமல்போனோர் விவகாரம் தொடர்பான தகவல்கள் மன்னார் மனிதப்புதைகுழிகள் மூலம் வெளிவரும் சாத்தியப்பாடுகள் உள்ளன.

ஆகையினால் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கை மற்றும் நவீன பரிசோதனை முறைகள் என்பவற்றுக்கான நிதியினை காணாமல்போனோர் அலுவலகம் வழங்கத் தீர்மானித்துள்ளது.

மனிதப்புதைகுழிகளின் உண்மைநிலை கண்டறியப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

மன்னார் மனிதப்புதைக்குழி விவகாரம் தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகத்தின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகளின் உண்மைநிலையைக் கண்டறிவதற்காக அங்கு அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக அந்நடவடிக்கை தடைப்படும் நிலை ஏற்பட்டது. ஆகையினால் காணாமல்போனோர் அலுவலகம் மனிதப்புதைகுழியில் அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான நிதியினை வழங்குவதற்கு முன்வந்தது.

காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகளுடன் மனிதப்புதைகுழி விவகாரம் நெருங்கிய தொடர்புடைய விடயமாக உள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுவரும் மனித எச்சங்கள் உண்மையிலேயே யாருடையவை, அவர்களுடைய உறவினர்கள் யார் போன்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

அதன்மூலம் காணாமல்போனோர் விவகாரத்தில் பல்வேறு உண்மைகள் வெளிவரும் சாத்தியப்பாடுகள் உள்ளதுடன், அவ்வாறு இல்லாவிடினும் மனிதப்புதைகுழி விவகாரத்தின் பின்னணியை கண்டறிவது மிக முக்கியமாகும்.

அத்தோடு மன்னார் மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துவரும் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவா சில நவீன பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் உண்மை நிலையினை ஓரளவிற்குக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

அதனால் அவ்வாறான நவீன பரிசோதனை முறைகளை மேற்கொள்வதற்கு அவசியமான வசதிகளையும் காணாமல்போனோர் அலுவலகம் வழங்கவுள்ளது.

மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் உதவிகளை வழங்குவதுடன் மாத்திரமன்றி, முழுமையான ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றது.

மாத்தளை மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் எமது அலுவலகம் அவதானத்துடனேயே உள்ளது. காணாமல்போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான தகவல்கள் மனிதப்புதைகுழி அகழ்வின் மூலம் பெறப்படும் சாத்தியங்கள் உள்ளமையினாலேயே இவ்விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!