ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு ரத்தநாள அறுவை சிகிச்சை- ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு ரத்தநாள அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கும்மிடிபூண்டியை சேர்ந்தவர் ஜெயராமையா (50). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கடுமையான வயிற்று வலி, ரத்த வாந்தி ஏற்பட்டது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் பரிசோதனையில் இருதயத்தில் இருந்து வயிற்றுக்கு செல்லும் பெருந்தமணி வீக்கமடைந்தும், வெடித்தும், சிறு குடலை அரித்து ஓட்டை விழுந்து ரத்த கசிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

உயிரை காப்பாற்றும் முயற்சியாக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வயிற்றின் உள்பகுதியில் உள்ள பெருந்தமணி வெடித்து அருகிலுள்ள சிறுகுடலுடன் ஒட்டிக் கொண்டிருந்தது. அறுவை சிகிச்சை காரணமாக சிறுகுடலில் இருந்து பெருந்தமணி பிரித்து எடுக்கப்பட்டது.

ஒட்டி இருந்த இடத்தில் குடலில் இருந்த ஓட்டை பெருந்தமணியின் ஒரு பகுதியை வைத்து அடைக்கப்பட்டது. பெருந்தமணிக்குள் இருந்த ரத்த கட்டிகள் அகற்றப்பட்டது.

பின்னர் பெருந்தமணியில் இருந்து கால்களுக்கு செயற்கை ரத்த குழாய் பொருத்தப்பட்டது. நோயாளியின் உயிரும், இரண்டு கால்களும் காப்பாற்றப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயராமையாவுக்கு 2 நாட்களுக்கு செயற்கை சுவாசம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு அவர் செயற்கைசுவாசம் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். அவரின் வயிறு வலியும், முதுகுவலியும் நீங்கியது.

இதுபோன்ற அறுவை சிகிச்சையில் பெருந்தமணி வெடித்தோ, குடல் அரித்தோ, குடல் அழுகியோ உயிர் இழப்பதற்கு 99 சதவீதம் வாய்ப்புள்ளது. இந்த அறுவை சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தால் ரூ.10 லட்சம் வரை செலவு ஆகும்.

ஆனால் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரத்த நாள அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் இளஞ்சேரலாதன், சண்முகவேலாயுதம், தீபன் குமார், தளவாய் சுந்தரம், மயக்கவியல் நிபுணர் குமுதா, செந்தில்குமார், சரவண குமார் ஆகியோரை ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரி டீன் பொன்னம்பல நமசிவாயம் பாராட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!