குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்க மக்களை வீதியில் இறக்க முயற்சி! – கூட்டு எதிரணியைச் சாடும் அகிலவிராஜ்

????????????????????????????????????
குற்ற வழக்குகளிலிருந்து தாம் தப்பித்துக் கொள்வதற்காக முன்னைய ஆட்சியாளர்கள் மக்களைக் குழப்பி வீதியில் இறக்குவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளருமான அகிலவிராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்து சட்டத்தை அமுல்படுத்துவற்காக விசேட நீதிமன்றத்தின் ஊடாக பணிகளை துரிதப்படுத்தியுள்ளோம். இதனால் கலக்கமடைந்துள்ளவர்களே மக்களை வீணாகக் குழப்பி வீதிகளில் இறக்கிவிடுவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் பொது மக்களின் உடைமைகளை மோசடி செய்து, ஊடகவியலாளர்களை படுகொலை செய்து, ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த குழுவினர் தற்போது குழப்பமடைந்து மக்களை வீதியில் இறக்கிவிட்டு குற்றவியல் சார்ந்த வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு போலியான ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடன் போலியான முறையில் பிரசாரங்கள் செய்யாமல் பல அபிவிருத்தி பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. எனினும் அரச மற்றும் தனியார் ஊடகங்களில் குறித்த தகவல்கள் வெளியிடப்படாமல் இருந்தாலும் அபிவிருத்தி பணிகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!