அழையா விருந்தாளியாக வந்த விஜயகலாவினால் சட்டத்தரணிகள் மத்தியில் குழப்பம்!

கிளிநொச்சி நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு ஒழுங்கமைப்பில் நீதி அமைச்சின் திடீர் தலையீட்டால் சட்டத்தரணிகள் கடும் விசனமடைந்து வெளியேற முடிவெடுத்த போதும், பிரதம நீதியரசர் அதிதியாகக் கலந்துகொண்டதால் அவருக்கு மதிப்பளித்து அந்த முடிவைக் கைவிட்டனர் .

கிளிநொச்சியில் மாகாண மேல் நீதிமன்றை உள்ளடக்கிய புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல ஆகியோர் பிரதம அதிதிகளாகப் பங்கேற்று அடிக்கல்லை நட்டு வைத்துள்ளனர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினர் முன்னெடுத்தனர். அவர்களின் நிகழ்வு ஒழுங்குகளின் அடிப்படையிலேயே இன்றைய விழா இடம்பெற இருந்தது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் நீதி அமைச்சரின் அழைப்பின் பேரில் நிகழ்வுக்கு வருகை தந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வருகையடுத்து நீதி அமைச்சின் திடீர் தலையீட்டால் நிகழ்வு ஒழுங்குகள் மாற்றியமைக்கப்பட்டன.

மங்கள விளக்கேற்றல் நிகழ்வு ஒழுங்கில் மூத்த தமிழ் நீதிபதியான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் பெயரை நீக்கிவிட்டு அவரது இடத்துக்கு விஜயகலா மகேஸ்வரனை மங்கள விளக்கேற்றலுக்கு நீதி அமைச்சு அதிகாரிகள் அழைத்தனர். நீதி அமைச்சின் இந்த நடவடிக்கை சட்டத்தரணிகளை பெரிதும் பாதித்தது. இந்த நிகழ்வை அரசியல் நிகழ்வாக மாற்றியமைக்க நீதி அமைச்சு முயல்கிறதா என கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன், அடிக்கல் நாட்டும் நிகழ்வு நிறைவடைந்ததும் உரையாற்றுவோர் ஒழுங்கில் கிளிநொச்சி சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணித் தலைவரை நீக்கிவிட்டு அவரது இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவின் பெயரை நீதி அமைச்சின் அதிகாரிகள் இணைத்துள்ளனர்.இதனால் அதிருப்தியடைந்த சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றுவாராயின் நிகழ்விலிருந்து வெளியேறுவோம் என யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கத்திடம் எடுத்துரைத்துள்ளனர்.

சட்டத்தரணிகள் சங்கத் தலைவி இந்த விடயத்தை நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரலயிடம் எடுத்துக் கூறினார். சட்டத்தரணிகளின் இந்த வெளிப்பாடை மேலோட்டமாக எடுத்துக் கொண்ட நீதி அமைச்சர், “இனி இப்படியான நிகழ்வு வடக்கு, கிழக்கில் நடைபெறாதுதானே” என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் பெயரை உரையாற்றுவோர் ஒழுங்கிலிருந்து நீக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் பணித்துள்ளார். அமைச்சரின் பொறுப்பற்ற பதிலில் அதிருப்தியடைந்த சட்டத்தரணிகள் நிகழ்விலிருந்து வெளியேற முடிவெடுத்த போதும், நாட்டின் நீதித் துறையின் தலைவர் பிரதம நீதியரசர் பங்கேற்றிருப்பதால் அவருக்கு மதிப்பளித்து நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்தாமல் முடிவைக் கைவிட்டனர் என குறிப்பிடப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!