விஜயகலாவுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தொடர சட்டமா அதிபர் அனுமதி

விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த அரச நிகழ்வு ஒன்றில் விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று உரையாற்றினார் என்றும், இது சிறிலங்கா அரசியலமைப்புக்கு எதிரானது என்று விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டிருந்த நிலையில், அரசியலமைப்பின் 157/A 3 பிரிவை மீறியதற்கு எதிராக, குற்றவியல் சட்டத்தின் 120 ஆவது பிரிவின் கீழ், விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் சட்டமா அதிபர் தெரியப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, விஜயகலா மகேஸ்வரனை கைது செய்வது குறித்தோ, அல்லது இப்போது அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!