பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக ஆற்றில் குதித்த இளைஞர்கள் – இருவர் பலி- அவுஸ்திரேலியாவில் சம்பவம்

அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் மேய்லான்ட் பகுதியில் பொலிஸாரினால் துரத்தப்பட்ட இளைஞர்கள் தப்புவதற்காக ஸ்வான் ஆற்றிற்குள் குதித்ததில் இருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

பொலிஸாரினால் துரத்தப்பட்டவேளை இளைஞர் குழுவொன்று ஸ்வான் ஆற்றிற்குள் குதித்ததை மேற்கு அவுஸ்திரேலியாவின் காவல்துறை ஆணையாளர் கிறிஸ்டோசன் உறுதி செய்துள்ளார்.

ஐந்து பதின்ம வயது இளைஞர்களே ஆற்றில் குதித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர் மேலும் மூவரை காப்பாற்றியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு இளைஞனின் உடலை திங்கட்கிழமை இரவு மீட்டுள்ளோம், காணாமல்போன மற்றொரு இளைஞனை தேடும் நடவடிக்கைகள் நேற்று மதியம் ஆரம்பமானதை தொடர்ந்து இன்று மற்றொரு இளைஞனின் உடலை மீட்டுள்ளோம் என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேய்லான்டின் புறநகர் பகுதியில் இளைஞர்கள் வேலிகளின் மேலாக

குதித்து ஒடுகின்றனர் என்ற தகவலை தொடர்ந்தே காவல்துறையினர் அவர்களை துரத்தியுள்ளனர்.

காவல்துறையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் துரத்தியவேளை அவர்கள் ஆற்றில் குதித்துள்ளனர்-

இரு இளைஞர்களை ஆற்றின் கரையில் மீட்டோம் மற்றைய இரு இளைஞர்களும் ஆற்றின் நடுவில் சிக்குப்பட்டு மூழ்கினர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஆற்றில் மூழ்கி இறந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளான அபோர்ஜினியர்களின் நூங்கர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!