முடிவை அறிவிக்க வேண்டும் மஹிந்த! – என்கிறார் பீரிஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவதற்கு, எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லை என்றும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை, நாட்டு மக்களுக்கு மஹிந்த அறிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான எந்தவிதமான சட்டச் சிக்கலும் இல்லை எனவும் அவர் கூறினார்.

“எனவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷவே தீர்மானிக்க வேண்டும்” எனவும், “ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோ அல்லது ஒன்றிணைந்த எதிரணியோ அவருக்கு இது தொடர்பில் எந்தவிதமான அழுத்தங்களையும் வழங்காது” எனவும் குறிப்பிட்டார்.

இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை வரவேற்பதற்காக சந்திக்குச் சந்தி அவரின் புகைப்படத்துடன் கூடிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன எனவும், மஹிந்தவின் இந்தியப் பயணத்தின்போது, சார்க் வலையமைப்பு நாடுகளின் சிரேஷ்ட தலைவர் என்றவகையிலேயே, அவருக்கு கௌரவமளிக்கப்பட்டதாகவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது எடுத்துரைத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!