ஜெனிவாவில் தப்பமுடியாது இலங்கை; அடித்துக்கூறுகிறது ஐ.தே.க.

un-flag“நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தாவிடின் ஜெனிவாவில் இம்முறை தப்பிக்கவே முடியாது. ஒவ்வொரு முறையும் சர்வதேசத்தை ஏமாற்றுவதைப்போல இம்முறையும் ஏமாற்றி விடலாம் என நினைத்தால் அது அரசின் அறியாமையையே எடுத்துக் காட்டும்.வடக்கிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி, அங்குள்ள மக்களின் காணிகளை மீட்டு மீண்டும் அவர்களுக்கே திருப்பிக் கொடுக்க அரசு இனியும் காலம் தாழ்த்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளது ஐ.தே.கட்சி.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் இலங்கைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது என அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பாக நேற்று வினவிய போதே ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இந்த அரசினால் நாட்டுக்கு மீண்டும் பேராபத்து ஜெனிவாவில் காத்திருக்கிறது. போர் முடிவடைந்தவுடனேயே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றியிருந்தால் இப்போது இது போன்ற பிரச்சினை வந்திருக்காது. நாமும் நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால்,போர் முடிவடைந்தவுடன் அங்குள்ள தமிழர்களின் காணிகளை எடுத்து, வடக்கில் அளவுக்கதிகமாக இராணுவ முகாம்களை அமைத்து அரசு, மேலும் பிழைகளுக்கு மேல் பிழைகளை செய்துவிட்டது – செய்து கொண்டு வருகிறது.

இந்தச் செயற்பாட்டால் சர்வதேசத்தினரின் ஒட்டுமொத்த கவனமும் நம் நாட்டின் மீதே திரும்பியுள்ளது. ஏன், அண்மையில் பிரிட்டன் நாடாளுமன் றத்திலும் இலங்கை அரசுக்கு எதிராக ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்படியான அழுத்தங்கள் வந்தும் கூட அரசு நல்லிணக்க ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்துவதாக இல்லை. காரணம், சிங்கள மக்களின் வாக்குகளே.

அரசு சிங்கள வாக்குகளை குறி வைத்தே அதன் ஒவ்வொரு அசைவுகளையும் செய்து வருகிறது. ஆகையால், அது நல்லிணக்க ஆணைக்குழுவை நடைமுறைப்படுத்துவதென்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.

ஆனால், இம்முறையும் அரசு ஏமாற்றினால் நிச்சயமாக தப்பிக்கவே முடியாது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றுவதைப்போல இம்முறையும் ஏமாற்றி இலகுவில் தப்பித்து விடலாம் என நினைத்தால் அது அரசின் அறியாமையையே எடுத்துக் காட்டும்.

காரணம், இம்முறை சர்வதேசமே வந்து இலங்கையின் நிலைமையை நேரடியாகப் பார்த்து விட்டுச் சென்றுவிட்டது. இதனால், அரசுக்கு ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

வடக்கில் இன்னமும் இராணுவ ஆளுநர் ஒருவர் இருப்பதை எமது கட்சி ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை நியமித்து இராணுவத்தினரின் எண்ணிக்கையையும் படிப்படையாக குறைக்க வேண்டும் என்றும் தமிழர்களின் காணிகளை உடனடியாக அவர்களுக்கே மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொள்கிறோம்” – என்றார்.

Tags: ,

Leave a Reply