திருமலைக்கு சென்றுள்ள இந்திய கப்பல்களை திரும்ப அழைக்கவும்: ஜெயா
மூன்று நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் கூட்டு போர் பயிற்சிக்காக இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த 2 போர்க்கப்பல்கள் இலங்கை சென்றுள்ளன.
இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் தொடர் கதையாக நீடித்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதன் காரணமாகவே கடந்த மாதம், இந்திய கடற்படையின் தலைமை அதிகாரி டி.கே.ஜோஷி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, அந்நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய வீரர்களை அனுப்ப மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கையில் இந்தியா, மாலைதீவு, இலங்கை ஆகிய 3 நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சி இடம்பெற உள்ளது.
இதற்காக இந்தியாவில் இருந்து 2 அதிநவீன கப்பல்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிநவீன கருவிகளை கொண்ட இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களான விஷ்வாஸ், ராஜ்கமல் ஆகியவை இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் விஷ்வாஸ் கப்பல் 94 மீட்டர் நீளமும், 2400 டன் எடையும் கொண்டது. இக்கப்பல் 10 அதிகாரிகள், 2 பயிற்சி அலுவலர்கள், 90 ஊழியர்களை உட்பட 102 பேரை கொண்டதாகும்.
ராஜ்கமல் கப்பல் 50.38 மீட்டர் நீளமும் 356 டன் எடையும் கொண்டதாகும். இதில், 5 அதிகாரிகள், ஒரு பயிற்சி அதிகாரி, 36 ஊழியர்கள் 42 பேர் உள்ளனர்.
திருமலைக்கு சென்றுள்ள இந்திய கப்பல்களை திரும்ப அழைக்கவும்: ஜெயா
இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்றுள்ள இந்திய கப்பல்கள் இரண்டையும் திரும்ப அழைக்குமாறு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கோரியுள்ளார்.
இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதனை வலியுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் நடக்கும் பயிற்சியில் இந்தியா பங்கேற்பதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ‘இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு கூடாது என்று வலியுறுத்தி பல முறை கடிதம் எழுதியுள்ளேன். இலங்கையுடன் இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ளது.
இலங்கையுடனான கடல்சார் ஒத்துழைப்பு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கவே உதவும். எனவே, உடனடியாக இலங்கைக்கு கூட்டு பயிற்சியில் ஈடுபட சென்றுள்ள 2 இந்திய கப்பற்படை கப்பல்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும், இலங்கையுடன் எந்த கூட்டு பயிற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்று பாதுகாப்பு துறைக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும'; என்று வலியுறுத்தியுள்ளார்.
















