‘கட்சிப் பணிக்காகவே மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தேன்’’ என ஜெயந்தி நடராஜன் கூறினார்.
சமீபத்தில் நடந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய நிலையில், காங்கிரஸ் கட்சி வரும் ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது.
இதற்கு கட்சியை தயார் செய்யும் விதத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அதிரடி மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை இராஜாங்க அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜெயந்தி நடராஜன், நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் பரிந்துரைபேரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். ஜெயந்தி நடராஜனுக்கு கட்சியில் பதவி அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயந்தி நடராஜனின் பதவி விலகலுக்கு, அவரது சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், பிற அமைச்சகங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்குத்தான் காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜெயந்தி நடராஜன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு வந்த எந்த திட்டங்களையும் கிடப்பில் போடவில்லை. அப்படி எந்த திட்டமும் கிடையாது. 100 சதவீதம் கட்சிப்பணி ஆற்றுவதற்காகத்தான் நான் பதவி விலகினேன். வேறு காரணம் எதுவும் கிடையாது. பிரதமர் எனது பணியைப் பாராட்டி இருக்கிறார்.
8 சதவீத திட்டங்கள்தான் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக வருகின்றன. மீதி 92 சதவீத திட்டங்களுக்கு மாநில அரசுகளே ஒப்புதல் வழங்கிவிடுகின்றன. எனக்கு எதுவும் வந்தது இல்லை. எந்தத் திட்டமும் நிலுவையில் போடப்படவில்லை.
அணைகள், நீர் மின்நிலையங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களைப் பொறுத்தமட்டில், உத்தரகாண்ட் துயரச் சம்பவத்துக்குப் பின்னர் அனைத்து அம்சங்களையும் மிகவும் கவனத்துடன் ஆராய வேண்டி உள்ளது.
மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் வன நிலங்களை எடுக்கும் இத்தகைய திட்டங்களைப் பொறுத்தமட்டில் மிகவும் கவனத்துடன் மதிப்பிட வேண்டி உள்ளது.
சட்டப்படியான சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் உள்ளன. உத்தரகாண்ட் துயரத்துக்குப் பிறகு எங்களுக்கு அச்சம் உண்டு.
நான் தன்னிச்சையாகவே கட்சிக்கு பணியாற்ற முன்வந்துள்ளேன். எனது நடவடிக்கைகள் எல்லாமே இணைய தளத்தில் உள்ளன. அவை ஒளிவுமறைவற்றவை.
இவ்வாறு அவர் கூறினார்.
















