அஞ்சு லட்சத்தை கொடுத்துட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே…! – விளம்பர வெறி பிடித்த விஜய் ரசிகர்களின் போஸ்டர்

vijay-posterஆரம்பகாலத்தில் தன்னை வைத்து படம் எடுத்ததால் நஷ்டப்பட்டு, நொடித்துப்போன ஐந்து தயாரிப்பாளர்களுக்கு கடந்த வாரம் தலா 5 லட்சம் வழங்கினார் விஜய்.

அதனால், எதிர்காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடும்போது, தன் கட்சிக்கு 5 லட்சம் ஓட்டு கிடைக்க வேண்டும் என்று அவர் கணக்கு போட்டிருக்கலாம்.

பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிப்பதிலும், சீப் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதிலும் விஜய் பத்தடி பாய்ந்தால், அவரது அப்பாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஜய் ரசிகர் மன்றத்தினர் பத்தாயிரம் அடி பாய்வார்கள்.

அப்படி ஒரு காரியத்தைத்தான் இப்போதும் செய்திருக்கிறார்கள் விஜய் ரசிகர் மன்றத்தினர்.

நலிந்த தயாரிப்பாளர்கள் என்று விஜய் 5 லட்சம் கொடுத்த ஐந்து பேரில்.. ஒருவர் திருமதி சாந்தா. இவர்.. மறைந்த கே.ஆர்.ஜி.யின் மனைவி. தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் படங்களைத் தயாரித்து பிரபல தயாரிப்பாளராக விளங்கியவர் கே.ஆர்.ஜி. தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தலைவராகவும் பதவி வகித்தவர். கடைசிவரை கம்பீரமான மனிதராக வாழ்ந்தவர்.

உதவி பெற்ற மற்றொரு தயாரிப்பாளர்…சி.வி.ராஜேந்திரன். சிவாஜி உட்பட பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல படங்களை இயக்கியவர். சிவாஜி, விஜய் நடித்த ஒன்ஸ்மோர் என்ற படத்தைத் தயாரித்தவர்.

பண உதவி பெற்றவர்களில் ஒருவரான பாலாஜி பிரபு என்ற தயாரிப்பாளர் விஜய்யை வைத்து விஷ்ணு என்ற படத்தை எடுத்தவர். இவரது அப்பா ஆஸ்கார் மூவீஸ் எம்.பாஸ்கர். பௌர்ணமி அலைகள், தீர்ப்புகள் திருத்தப்படலாம் உட்பட சில படங்களை இயக்கியவர். கண்டிப்புக்கும் சுயமரியாதைக்கும் பேர் போனவர் பாஸ்கர்.

வசந்தவாசல் என்ற படத்தை எடுத்த எம்.ஆர். என்கிற எம்.ராஜாராம் இதயநோயாளி. இதய அறுவைசிகிச்சை செய்து கொண்டு வீட்டில் படுத்திருந்தவரை அலேக்காக தூக்கி வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்தனர்.

வெயிட்..வெயிட்…கதை எங்கேயோ ஆரம்பிச்சு..வேறு எங்கோ போற மாதிரி தெரியுதே…!?

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வதுதான் விஜய்யின் நோக்கம் என்றால், அதை தனிப்பட்ட முறையில் செய்திருக்கலாம்.

அப்படி செய்யாமல், ஊரைக்கூட்டி உதவி செய்து தன் விளம்பர பசியைத் தீர்த்துக்கொண்டார்.

அவரது ரசிகர் மன்றத்தினர் ஒருபடிமேலேபோய் 5 லட்சம் வாங்கியவர்களின் போட்டோவைப்போட்டு போஸ்டரை அடித்து தமிழகம் முழுக்க ஒட்டிவிட்டனர்.

இந்தப் போஸ்டரைப் பார்த்துவிட்டு ஒரு தயாரிப்பாளர் சொன்னார்….

”அஞ்ச லட்சத்தைக் கொடுத்துட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே..!”

இந்த நேரத்தில் விஜய்க்கு ஒரு விஷயம் சொல்ல வேண்டும்….

வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக் கூடாது விஜய்…!

அதைவிட, உங்கள் ரசிகர் மன்றத்தினருக்குத் தெரியவே கூடாது…!

Tags: , ,

Leave a Reply