எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தக் கடற்றொழில், நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று அடுத்தவாரம் இந்தியாவுக்குப் பயணமாகி உள்ளது.
இந்தக் குழுவில் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, கடற்படை ஆகியவற்றின் முக்கிய பிரமுகர்கள் அடங்கி உள்ளனர். இவர்கள் இந்தியாவின் வெளி விவகார அமைச்சர், மீன் பிடித்துறை அமைச்சர், கடற்படை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து மீனவர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன் தமிழ் நாட்டு மீனவர்கள் அமைப்பின் 10 பேரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றும் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் பேச்சு நடத்தவுள்ளது. இந்தப் பேச்சு களில் கலந்துகொள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன சம்மதித்துள்ளார் என்று இலங்கை இந்திய மீனவர் பேரவையின் இலங்கை இணைப்பாளர் எஸ்.பி. அந்தோனி முத்து தெரிவித்தார்.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இருநாட்டு மீனவர் கள் தொடர்பான விவகாரம் இந்தப் பேச்சுகளில் முக்கிய இடம் வகிக்கும் என்று தெரியவருகிறது. அத்தோடு இரு நாட்டுக் கடற்படையினராலும் கைதான மீனவர்கள் விடுதலை குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் கடல்சார் பொருளாதாரம் தொடர் பில் புதிய ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன என்று அறிய முடிகின்றது.
அதேவேளை, இந்துமா சமுத்திரத் தில் ஐரோப்பிய நாடுகளின் மீன்பிடி நடவடிக்கை அதிகரித்துள்ளமை உட்பட கடற்சார் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளன.
தமது இந்திய பயணம் தொடர்பில் நேற்று முன்தினம் அமைச்சர் ராஜித சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இலங்கை உயர்மட்டக்குழு மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆராய இந்தியா செல்லவிருப்பது குறித்து தமக்கு எதுவித அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று வடமாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“”இந்தியா செல்லும் இலங்கைக்குழுவில் வடமாகாண மீனவர் சார்பில் குறைந்த பட்சம் 4 பிரதிநிதிகளாவது இடம்பெறவேண்டும். ஏனெனில் எங்களுக்குத் தான் எங்களின் பிரச்சினை தெரியும். எனவே நாங்கள் சென்றால்தான் அதுபற்றி தெளிவாக விளக்கமுடியும். ஏற்கனவே இந்திய மீனவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் உள்ள விடயங்கள் எமக்கே தெரியும்.
எனவே தான் இந்தப் பேச்சுகளில் நாம் இருப்பது சுமுகமான முடிவொன்றை எட்ட உதவும். இதேவேளை இந்தியாவுக்குச் செல்லும் இலங்கைக் குழுவிடம் “எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்யக்கூடாது, கைது செய்யப்பட்ட மீனவர்களை சிறையில் அடைக்காது விடுவிக்க வேண்டும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைக்க வேண்டும்’ என்று இந்திய வலியுறுத்த உள்ளதாக அறிகிறோம்.
ஆனால் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறக் கூடாது என்று இதன்போது இலங்கை உயர்மட்டக் குழு ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் என்று எமக்கு நம்பிக்கை இல்லை. உண்மையில் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் எல்லை மீறா விட்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆகவே முதலில் இந்திய மீனவர்கள் எல்லை மீறாமல் இருக்க வேண்டும் என்றே இந்தப் பேச்சுக்களில் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். இதேவேளை நாளை மறுதினம் வவுனியாவில் வடமாகாண மீனவர் சங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி இது தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்க உள்ளோம்” என்றார்.
















