வாக்கு வேட்டை நடத்தவே ஜெனிவா நேரத்தில் தேர்தல்; அரசு மீது ஜே.வி.பி. குற்றச்சாட்டு

vijithaஜெனிவாவையும் மின்சாரக் கதிரையையும் தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தி வாக்கு வேட்டை நடத்துவதற்காகவே ஜெனிவா மாநாடு நடைபெறும் மார்ச்சில் அரசு இங்கு தேர்தலை நடத்துகின்றது என்று ஜே.வி.பி. குற்றஞ் சாட்டியுள்ளது.

நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படுமானால் அதன் தாக்கம் மக்களுக்கே ஏற்படும் என அக்கட்சியின் பிரசாரச் செயலாளரான விஜித ஹேரத் கூறினார்.

ஜே.வி.பியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது, ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பி கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டு மக்களுக்கு ஒன்றையும் ஜெனிவாவில் மற்றொன்றையும் கூறிவரும் இந்த அரசு மக்களைத் தூண்டிவிடும் வகையில் கருத்து வெளியிடுகின்றது.

வருகின்ற தேர்தல்களின் போது மின்சாரக் கதிரை அரசின் தேர்தல் சின்னமாகக்கூட இருக்கலாம். ஏனெனில், ஜனாதிபதியை மின்சாரக் கதிரைக்கு கொண்டுச் செல்லப் போகின்றார்கள் என கூறி வாக்குகளைப் பெறுவதற்கு அரசு முயற்சிக்கும்.

இதனால்தான் மார்ச்சில் அது தேர்தலை நடத்துகிறது. எனவே, இதற்கு ஏமாற வேண்டாம் என நாம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, போரின் போது எது நடந்தாலும், போருக்குப் பிறகு இடம்பெறுகின்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தான் நாட்டுக்கும் மக்களுக்கும் இன்று சவால்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மனித உரிமைகள் சபையில் நாட்டுக்கு எதிராக ஏதாவது ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அதனால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள். பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டாலும் அதன் தாக்கம் நாட்டு மக்களுக்கே ஏற்படும்.

எனவே, ஜெனிவாவுக்குச் சென்று அறிக்கைகளை மாத்திரம் தாக்கல் செய்யாது, இந்த அபாயநிலையை தவிர்க்க வேண்டுமானால் அரசு நாட்டில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் விஜித ஹேரத் வலியுறுத்தினார்.

Tags: ,

Leave a Reply