வடக்கு ஆயர்கள் பயங்கரவாதிகள்; பிரதியமைச்சர் குற்றச்சாட்டு

terrorவடக்கு ஆயர்கள் பயங்கரவாதிகள் எனச் சாடியுள்ள தொழில் மற்றும் தொழிலாளர்கள் உறவுகள் பிரதியமைச்சர் றியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர, ஆயர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்ரீபன் ராப்பிடம், யாழ்.ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, கடற்படையின் முன்னாள் அதிகாரிகளில் ஒருவரும், தற்போது பிரதியமைச்சருமான றியர் அட்மிரல் சரத் பி.வீரசேகர, ‘பயங்கரவாதிகள் என்றால் நாட்டுக்கு எதிரானவர்கள் என்பதே அர்த்தம். அதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

பயங்கரவாதம் என்பதற்கு நடுவில் எவரும் வேறு எந்த அர்த்தமும் கூற முடியாது. எமது படையினர் மனிதாபிமானப் போரையே நடத்தினர். எமது கடற்படையினர் பலரைக் கொன்ற, கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி பிள்ளைகளையும் இறுதிப் போரில் கைது செய்தனர்.

இது யாருக்கும் தெரியாது. அவர்களை எதுவும் செய்திருக்கலாம். ஆனால் எமது படையினர் அவர்களைப் பாதுகாத்தனர். இன்று அவர்கள் மகிழ்ச் சியாக உயிர் வாழ்கின்றனர்.

அது போன்றே, இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 250 பொதுமக்களைப் பணயக் கைதியாக வைத்துக் கொண்டு சுற்றிவர கண்ணி வெடிகளைப் புதைத்து இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்.

எமது படையினர் நினைத்திருந்தால் பீரங் கித் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யவில்லை. மாறாக கண்ணி வெடிகளுக்கு மேலாக நடந்து சென்று பிரபாகரனைக் கொன்று மக்களை பாதுகாத்தனர். இதனால் எமது படையினர் 300 பேர் கால்களை இழந்தனர்.

கூட்டமைப்பு எங்கே?
விடுதலைப் புலிகள் பொது மக்களையும் புத்திஜீவிகளையும் கொன்ற போதும், சிறுவர்களைப் படைக்குச் சேர்த்த போதும் இந்த ஆயர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் எங்கே இருந்தனர். போர் முடிந்த பின்னர் புலிகள் புதைத்து வைத்த 5 இலட்சத்துக்கும் அதிகமான கண்ணிவெடிகளை எமது படையி னரே உயிரைப் பணயம் வைத்து அகற்றினர்.

மக்களுக்கு 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளை நிர்மாணித்துத் கொடுத்தனர். அடிப் படை வசதிகளை ஏற்படுத்தினர். இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ ஆயர்களோ ஏதாவது உதவிகளைச் செய்தார்களா? ஒன்றும் செய்யவில்லை.

அவ்வாறானவர்கள் இன்று அமெரிக்காவின் பிரிவினை வாதத்துக்குத் துணை போகின்றனர். பயங்கரவாதத்தை உருவாக்க முனைகின்றனர். இவர்கள் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காகச் செயற்படவில்லை. மாறாக அதற்கு எதிரானவர்களாகவே செயற்படுகின்றனர் – என்றார்.

Tags: , , ,

Leave a Reply