கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் எடிசன் விருது வழங்கும் விழா இந்த ஆண்டு பிப்ரவரி16 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த விருது விழாவில் தமிழ்த்திரை நடனக் கலைஞர்கள் மட்டுமல்ல மலேசிய, சிங்கப்பூர், கனடா நாடுகளின் நடனக் கலைஞர்களும் நடனம் ஆடுகிறார்கள்.
எடிசன் விருதுகளுக்கான ஆன்லைன் வாக்கெடுப்பு அறிமுகவிழாவில் நடிகை சஞ்சனா, கதாசிரியர் பிரபாகர், தயாரிப்பாளர் சுரேஷ், பாடகர் வேல்முருகன், நடன இயக்குநர் அஜய், மலேசிய பத்திரிகையாளர் எஸ்.பி. சரவணன், மின்னல் எப் .எம் பொன். கோகிலம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
ஆன்லைன் வாக்கொடுப்பையும் தொடங்கி வைத்தனர்.
வழக்கம்போல் ராதாரவியின் பேச்சு ரணகளம்…
“எடிசன் விருது என்பதில் எடிசன் என்கிற பெயரே நன்றாக இருக்கிறது. சினிமாவைக் கண்டுபிடித்த அவருக்கு செய்கிற மரியாதையாக அவர் பெயரில் வழங்கப் படுவது பாராட்டுக்குரியது. சினிமாவில் எல்லாருமே ஈகோ உச்சியில் இருப்பவர்கள். அவர்களை அழைத்து விருதுவிழா நடத்துவது சிரமம்தான். மலேசியா கவர்னர் இந்த விழாவுக்கு வருகிறார்.
ஒரு பத்திரிகையில் உங்களுக்கு விருது தருகிறோம். தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று அழைத்தார்கள். நான் வர முடியாது, வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்றேன். ஆளை மாற்றி விட்டார்கள். வேறு ஆளுக்கு கொடுத்துவிட்டார்கள்.
உங்கள் விழாவுக்கு யார் வருகிறார்களோ அவர்களுக்குக் கொடுங்கள். வரவில்லை என்றால் ஆளை மாற்றி விடாதீர்கள். தகுதியான ஆட்களுக்குக் கொடுங்கள். வரவில்லை என்றாலும் வீட்டுக்குப் போய் கொடுங்கள். சிலரைப் போல கலெக்ஷனுக்காகவும் நடத்தக் கூடாது. தேர்வை நீங்கள் செய்வதில்லை என்பதில் மகிழ்ச்சி. வாக்கெடுப்பின் மூலம் விருதுகள் வழங்குவது மகிழ்ச்சி, பாராட்டுக்குரியது.
இன்றைக்கு என்ன நடக்குது தெரியுமா? படம் பார்க்கத் தெரியாதவன் பார்த்துட்டு இருக்கிறான். படம் நடிக்கத் தெரியாதவன் நடிச்சுட்டு இருக்கிறான். தமிழே பேசத் தெரியாதவன் நடிச்சுட்டு இருக்கிறான்.
இடி அமீனாக நடித்த ஒரு அடையாளம் தெரியாத கறுப்பு நடிகனுக்கு ஆஸ்கார் விருது கொடுத்தார்கள். நாலைந்து காட்சிகளில் வந்தாலும் மௌனராகம் கார்த்திக் மாதிரி சிறப்பாக நடித்தால் விருது கொடுக்க வேண்டும். தோன்றுவது வேறு நடிப்பது வேறு.
சமீபத்தில் ஒரு நடிகன் சொன்னான் அந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்று படம் பூராவும் தோன்றினால் அதற்குப் பெயர் நடிப்பா? முதல்ல நடிக்க கத்துக்கப்பா என்றேன். நடிப்பது வேறு தோன்றுவது வேறு இல்லேயா?”
என்ற ராதாரவி வழக்கம்போல் சுயபுலம்பலையும் புலம்பிவிட்டுத்தான் போனார்..
“மலேசிய அரசாங்கம் டத்தோ என்கிற பட்டம் கொடுக்கிறது. இதை தென் இந்தியாவிலேயே எனக்கு மட்டும்தான் கொடுத்து இருக்கிறார்கள். வட இந்தியாவில் ஷாருக்கானுக்குக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இதை சினிமா நூற்றாண்டு விழாவில் யாரும் கண்டு கொள்ளவில்லை. டத்தோ ராதாரவியை யாருக்கும் தெரியவில்லை.”
















