இலங்கையில் உண்மையைக் கண்டறியும் குழுவை அமைப்பதில் நம்பிக்கை இல்லை. அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே நடைமுறைப்படுத்தவில்லை.
அதனால் எமக்கு அரசின் மீது நம்பிக்கை இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உண்மையைக் கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே அரசு நடைமுறைப்படுத்தாத நிலையில், உண்மையைக் கண்டறியும் குழுவை அமைப்பதில் பயன் இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவே உண்மையைக் கண்டறியும் குழு அமைக்கப்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. உலகில் எங்கேனும் ஒரு குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த இன்னும் ஒரு குழு அமைக்கப்படவில்லை.
தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் மன்னிக்கும் குணத்தை வெளிக்காட்டியமையால் உண்மையை கண்டறியும் குழு வெற்றியளித்திருந்தது.
எனினும் இலங்கையின் அரச தரப்பினர் அவ்வாறு செய்வார்களா? போரில் சொந்த நாட்டில் உள்ளவர்களை வெற்றி கொண்டு விட்டதாகக் கூறி பாற்சோறு உண்டு மகிழ்ந்தவர்கள் எவ்வாறு இப்படி மன்னிக்கும் குணத்தை வெளிக்காட்டுவார்கள்?.
அரசு 2009 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதி மொழிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 13 ஆம் திருத்தத்தை முழு மையாக நடைமுறைப்படுத்துவதுடன், சர்வதேசத்துக்கு கொடுத்த உறுதிமொழிகளையும் நிறைவேற்ற வேண்டும் – என்றார்.
இலங்கையின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக உண்மையை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும்.
















