தலைமைத்துவம் என்பது அரசியலுக்கு ஒரு அரசாங்கத்துக்கு, நிறுவனங்களுக்கு, சமூகக்கழகங்களுக்கு மேலும் இதுபோன்ற கூட்டுச் செயல்பாடுகள் அனைத்திற்குமே அவசியமாகிறது.
இது சரியாக இல்லாதுவிடில் மக்களின் வாழ்வோ, தொழில்வளர்ச்சியோ, விஞ்ஞான வளர்ச்சியோ எதுவுமே வெற்றிபெற முடியாது. மொத்தத்தில் மக்களின் வாழ்வே சீரழிந்துவிடும். மேற்கூறிய அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான முதல்வழி இதுவேயாகும்.
தலைமைத்துவம் என்பது ஒரு கூட்டு முறைமை. இதன் தலைவரே இதற்கு அடிநாதமாக விளங்குகிறார். அத் தலைவன் நேர்மை, திறமை, தியாக உணர்வு, வீரம், அன்பு இவை அனைத்தும் அமையப்பெற்றவனாகவே இருக்க வேண்டும். இதில் ஒன்று இல்லாவிடிலும் அதன் தகுதியை இழந்துவிடுகிறான் என்பதே உண்மையாகும்.
ஒரு அரசியல் கட்சியை நாம்பார்ப்போம். அதன் தலைமைத்துக் குழுவில் உண்மையான மக்கள் சேவகர்களே உறுப்பினர்களாக்கப்பட வேண்டும்.இவர்களிடம் நேர்மையும் திறமையும் இணைந்திருக்கவேண்டும். இது இரண்டும் இல்லாதவர்களை தலைமைக் குழுவில் இணைத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பாக நேர்மையில்லாத திறமை மட்டும் உள்ளவர்களை இணைத்துக் கொள்ளவே கூடாது. இது கட்சியின் வளர்ச்சியைப் பாதிப்பதோடுஇ மக்களின் வாழ்வினையும் பாதித்து விடும்.
தலைமைத்துவத்திற்கு தனியான குணவம்சங்கள் உள்ளன.
1) சுயநலமற்ற தன்மை
2) தராசு முள்ளின் சமத்தன்மை போன்ற நேர்மை
3) துன்பங்களைத் தாங்கக்கூடிய தியாகத் தன்மை
4) உலக அறிவையும், அனுபவங்களையும் உள்வாங்கும் தன்மை
5) அச்சமற்ற தன்மை
இதில் ஒன்று இல்லாதுவிடிலும் இது உயிர் வாழமுடியாது. இவை அனைத்தும் தலைமைத்துவத்தின் விதியாகவே இருக்கின்றன.மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டுவதற்கு அரசியல்கட்சி தோற்றுவிக்கப்படுகிறது. அது போன்று அம் மக்களை வழி நடாத்துவதற்கு அரசாங்கம் தோற்று விக்கப்படுகிறது. முன்னையதில் இருந்துதான் பின்னையது தோற்றுவிக்கப்படுகிறது. “அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது’’ என்பதும் “அரசியலாளன் மக்களின் சேவகன்’’ என்பதுமே உண்மையான தத்துவமாகும். இதையே உண்மையான தலைமைகள்செய்துகொண்டிருக்கிறன. இவற்றைப் பல நாடுகளில் காணலாம். இங்கு மக்களின் பங்களிப்பே முதன்மையாக இருக்கின்றன. அந் நாடுகள் வளர்ச்சி பெற்றதிற்கும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இதுவே முதன்மைக் காரணமாக உள்ளது.
இது தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் சரியாக இல்லாததால் வேறொரு இன த்தின் ஆதிக்கத்தின் கீழ் வாழுகின்ற அவலம் நடைபெற்றுக்கொண்டிருகிறது.
இந்த அவலத்தை நாம் பார்ப்போம்
முள்ளிவாய்க்காலுக்கு பின் நாலு வருடங்கள் கடந்த பின்னும் தமிழ்மக்களின் வாழ்வு முன்பிருந்ததை விட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழீழப் பகுதிகள் அனைத்திலும் இராணுவத்தின் ஆதிக்கமே நடைமுறையில் உள்ளது.
சிவில் நிர்வாகத்தில் சிங்கள அதிகாரிகளே கூடுதலாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ்பிரதேசங்களில் சிங்களக்குடியேற்றங்கள்வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
வடகிழக்கு மாகாணத்தையே இரண்டாகப் பிரித்ததோடு தமிழ்மக்களின் அடிப்படையான விடயங்களையே மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதும் கூட இப்போதுள்ள தமிழ் தலைமைகள் எதுவுமே செய்யமுடியாது உள்ளார்கள். தந்தை செல்வாவின் காலத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரகங்கள் போன்ற அகிம்சைப் போராட்டங்களைக் கூட நடத்தமுடியாது உள்ளார்கள். வெறுமனே பாராளுமன்றத்தில் பேசுவதும்இ வெளிநாடுகளுக்கு சொல்வதோடும் நின்று கொள்கிறார்கள். இத் தலைமைகளின் கையாலாகாத்தனத்தால் தமிழினத்தின் தலைஎழுத்தே கேள்விக் குறியாகிக்கொண்டிருக்கிறது. இங்கு இணக்க அரசியல் என்பது ஒரு இனத்தை அடிமையாக்கும் செயல்பாட்டினையே கொண்டுள்ளது.
ஈழத்தில் தலைவர் தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகிய தலைமைகளுக்குப் பின் ஈழத்தமிழர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மையாகும்.
உலகத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய உண்மையான தலைமையை எதிரி உலக அரசுகளோடு கூட்டுச்செர்ந்து அழித்துவிட்டான். ஆயினும் இதிலிருந்து மீண்டு எழுவதும் இவர்களால் தான் முடியும். ஆயுதப்போரில் உயிரை அற்பணிக்கத் தயாரான போராளிகளும், புதிய இளைய தலைமுறையினரும்இ மக்களும் ஜனநாயகப் போராளிகளாக மாறவேண்டும் இன்றைய உலக ஒழுங்குக்கு அமைய அரசியல் போராளிகளாக உருவாகவேண்டும். அதே உயிரை ஜனநாயகப் போரில் அர்ப்பணிக்கத் தயாராக வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு “உயிருக்குப் பயந்தவர்களால் தலைமை தாங்க முடியாது’’ என்பதே உண்மையாகும்.
அடுத்து தலைவராகும் ஆசையைப் பார்க்கும் போது மேலும் பல உண்மைகளப் புரிந்துகொள்ளமுடியும்.
இது தமிழ் மக்கள் மத்தியில் தான் அதிகமாக உள்ளது. இங்கு தலைவராகுவதர்க்கு எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். இந்த ஆசையினை எதிரி தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்கிறான். பல கூறுகளாக மக்கள் பிரிவதையே எதிரி விரும்புகிறான். எதிரியின் இவ் ஆசையினை இத் தலைவர்களும் எம் மக்களும் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது இம் மக்களுக்களின் சாபக்கேடாகவே இருக்கிறது.
ஒரு நாட்டில் ஆளும்கட்சி எதிர்க்கட்சி அதிக பட்சமாக இன்னொரு கட்சியும் இருக்கலாம், ஆனால் தமிமக்கள் மத்தியில் பத்துக்கு மேற்ப்பட்ட கட்சிகள் இருக்கின்றன. இது தலைவராகும் ஆசையினாலும் எதிரிகளின் சூழ்ச்சியினாலுமே உருவாக்கம் பெறுகிறது. ஒரு தலைவரின் கீழ் அவரது குடும்பம் அவரது உறவினர்கள் அவர்களது நண்பர்கள் சேர்ந்து கொள்கிறார்கள். இப்படி பத்து தலைவர்கள் பின்னாலும் மக்கள் அனைவரும் பத்துக் கூறுகளாகப் பிரிகிறார்கள். இப் பிரிவினையால் ஒற்றுமை முற்றாகவே பாதிப்படைகிறது. இதனால் மக்கள் மத்தியில் வேற்றுமைகள் வளர்க்கப்பட்டு சண்டைகள், உயிரழிவுகள் நடப்பதைக் கூட நாம் காண்கிறோம். சண்டியர்கள் எனப்படும் தாதாக்கள் இங்கு தான் வளர்க்கப்படுகிறார்கள். இவர்கள் உயிர்களை அழிப்பதற்குகொஞ்சமும் தயங்காதவர்கள். ஒவ்வொரு கட்சியிலும் தாதாக்கள் தீனி போட்டு வளர்க்கப்படுகிறார்கள். இவர்களால் மக்கள் படும் துன்பங்கள்அளப்பெரியன. மக்களின் நலனுக்கென ஆரம்பிக்கப்படும் இக் கட்சிகள் மொத்தத்தில் நன்மை செய்வதை விட தீமையே செய்கின்றன.
“ஒருமைப்பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்’’ என்ற பழமொழிக்கமைய அரசியலில் மக்களை பல கூறுகளாகப் பிரிப்பதே ஒரு பிழையான செயல் பாடாகும். ஒற்றுமையே மக்களின் வாழ்வியலுக்கான அரசியலின் அடிநாதமாகும் அது இல்லையெனில் அடிப்படையே ஆட்டம்கண்டுவிடும்.
இங்கு மக்களின் பங்கு முதன்மை பெறாத காரணத்தினால் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் உருவாகுவதற்கு இது வாய்ப்பாக உள்ளது.
மக்கள்தான் அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும். மக்களின் விருப்பின்றி அரசியல்வாதி உருவாகக் கூடாது. இது மக்களின் சேவைக் கூடாகவே உருவாக வேண்டும்.தமிழ்பிரதேசங்களில் மக்கள் அரசியலில் ஆர்வமில்லாது இருப்பதும், தங்களின் வேலைகளைத் தாங்கள் பார்ப்போம், அரசியல்வாதிகள் எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும் என்ற மனநிலையில் வாழ்வதால் தான் இந்த நிலை உருவானது.
தங்களின் வாழ்வுக்காகத்தான் அரசியல் தோற்றம் பெற்றதென்பதை தெரிந்து கொள்ளாது இருக்கும் தமிழ்மக்களின் அறிவீலித்தனத்தால் யானை தன் கையால் தானே மண்ணை அள்ளி தன் தலையில் போட்டது போல் தங்களது வாழ்வை தாங்களே தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பகாலங்களில் தமிழகத்திலும், தமிழீழத்திலும் மிகவும் குறைவான கட்சிகளே இருந்தன. தமிழகத்தில் காங்கிரஸ்கட்சி, திரவிடமுன்னேற்றக்கழகம்இ சுகந்திரக்கட்சி போன்ற ஒரு சில கட்சிகளும்இ தமிழீழத்தில் தமிழ் காங்கிறஸ், தமிழரசுக்கட்சியும், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி போன்ற சில கட்சிகள் மாத்திரமே இருந்ததன. மக்கள் உண்மையானவர்களைத் தெரிவு செய்வதற்கும், சரியானவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் இலகுவாகவே இருந்தது. இன்று பெயர்களைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு புற்றீசல்கள்போல் அரசியல் கட்சிகள் உள்ளன. வளர்ச்சியடைந்த உலகநாடுகளைப் பார்ப்போம் ஆனால் மிகக் குறைவான கட்சிகளே இன்றும் உள்ளன. அதனால் தான் அந் நாடுகள் வளர்ச்சியடையவும் அவ் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் முடிகிறது.
இதுவே போலி அரசியல்வாதிகளுக்கு மூலதனமாகவே இருக்கிறது.
இவர்களின் ஒற்றுமையில்லாத செயல்பாடுகளைப் பார்க்கும்போது மேலும் சில உண்மைகளை நாம் புரிந்துகொள்ள முடியும்.
தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் ஈழபிரச்சினையை தங்களது அரசியலாக எடுத்துக்கொண்டார்கள். எமது பிரச்சினையில் பிரிந்து நின்று அரசியல் நடாத்தியதன் மூலம் எதுவுமே செய்யமுடியாது இருந்தார்கள். வெறுமனே கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எனத் தனித்தனியே நடாத்திக்கொண்டிருந்தார்கள். ஒற்றுமையில்லாத இப் பிரிவினைச் செயல்பாடுகளால் எதுவுமே இவர்களால் செய்யமுடியவில்லை. மாறாக எந்த மக்களுக்காக இதைச் செய்தார்களோ அந்த மக்கள் எதிரியால் வகை தொகையின்றி நாளாந்தம் அழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். இதைத் தடுக்க இவர்களால் முடியவில்லை.
தமிழகத்தின் ஆறு கோடித்தமிழர்களும் ஒற்றுமையாக கிளர்ந்தெழுந்திருந்தால் தமிழீழ மக்கள் காப்பற்றப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மையாகும்.
இதே நேரம் ஒற்றுமையான ஒரு செயல்பாட்டையும், அதனால் அடைந்த வெற்றியையும் பார்ப்போம். கடந்த ஆண்டு ஜ நாடுகள் சபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானத்தை மத்தியஅரசு ஆதரிக்க வேண்டுமென தமிழக மாணவர்கள் ஒன்றுபட்டு எழுந்துநின்றார்கள. பட்டி தொட்டியெல்லாம் போராட்டங்கள் நடாத்தினார்கள். தமிழகமே அதிர்ந்த்தது. தமிழகத்தை மட்டுமல்ல இந்திய அரசையே அசைய வைத்தார்கள். வெற்றியும் கண்டார்கள். ஒற்றுமையான செயல்பாட்டுக்கு இது ஒரு உதாரணமாகும்.
ஏணைய உலகமக்கள் போல் தமிழ்மக்களும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனில், இந்த அவலங்களில் இருந்து மீண்டு எழவேண்டும். அரசியலில் ஒரு சரியான தலைமையின்கீழ் ஒன்றுபட வேண்டும். உறவு, நட்புப் பார்த்து அரசியலில் இணையக் கூடாது. ஓரிரு கட்சிகளைத் தவிர ஏணைய கட்சிகள் அனைத்தையும் ஒற்றுமையாக நிராகரித்து விடவேண்டும்.
இதுதான் இம் மக்கள் மீட்சி பெறுவதற்கான வழியும், மகிழ்சியான வாழ்வுக்குரிய வழியுமாகும்.
-மாறன்
















