சசி தரூரின் மனைவி திடீர் மரணம் – தற்கொலையா?

sasi-wifeஇந்திய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள தனியார் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் வெள்ளிக்கிழமை இரவு இறந்து கிடந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சசி தரூருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா புஷ்கர், டுவிட்டர் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு கருத்து வெளியிட்ட நிலையில் நிகழ்ந்துள்ள இந்த மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்த தகவலை பொலிஸாருக்கு அமைச்சர் சசி தரூரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும், முதல்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் டெல்லி பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் கடந்த 2012இல் சுனந்தா புஷ்கரை மணந்தார்.

சுனந்தாவும் இரு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், தன் கணவர் சசி தரூருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த மெஹர் தரார் என்ற 45 வயதுள்ள பெண் பத்திரிகையாளருடன் தொடர்பு இருப்பதாக சுனந்தா, டுவிட்டர் இணையதளத்தில் புதன்கிழமை ஒரு பதிவை வெளியிட்டார்.

இதை மறுத்து சசி தரூர், “தானும் தனது மனைவி சுனந்தாவும் மகிழ்ச்சிகரமான தம்பதியாக வாழ்ந்து வருகிறோம். சுனந்தாவுக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றார். அவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்´ என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

Tags: ,

Leave a Reply