யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் மார்ச் மாதத்துக்குள் நம்பகமான சுயாதீன உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்காவிட்டால், இலங்கைக்கு எதிராக அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், உள்ள தமது ஆசனத்தை பிரித்தானியா பயன்படுத்தும் என்று பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய பணியக இணையமைச்சர் ஹியூகோ ஸ்வைர் எச்சரித்துள்ளார்.
நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
எதிர் வரும் மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கை விவகாரம் தொடர்பாக அனைத்துலக பங்காளர்களுடன் நாம் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கையைக் கொண்டு இலங்கை குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியும். எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார்.
நம்பகமான உள்நாட்டு செயல்முறைகளை வரும் மார்ச் மாதத்துக்குள் முறைப்படி ஆரம்பிக்காவிட்டால், இலங்கைக்கு எதிராக அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்க ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உள்ள ஆசனத்தை பயன்படுத்துவது என்பதில் பிரித்தானியா தெளிவாக இருக்கிறது என்றார்.
மேலும், கடந்த நவம்பர் 18ஆம் நாள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான, வெளிப்படையான, சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இலங்கைக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.
















