காணாமற்போனோர் விடயத்தில் படையினரின் பங்கு குறித்தும் விசாரணைகளை ஆணைக்குழு முன்னெடுக்கும் என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
‘இறுதிக் கட்டத்தில் எமது உறவுகள் காணாமற்போனதற்குப் படையினர் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். எங்கள் உறவுகள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள். அவர்களை எப்படியாவது மீட்டுத்தாருங்கள்’ என்று ஆணைக்குழுவின் முன்பாக உறவினர்கள் நேற்றுக் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர்.
இதற்குப் பதிலளித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது விசாரணைகளை நேற்றுக் கிளிநொச்சியில் ஆரம்பித்தது.
ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம, ஆணையாளர்களான மனோ ராமநாதன் மற்றும் சுரஞ்சா வித்யவத்னே ஆகியோர் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றன. 36 பேர் நேற்று அமர்வில் சாட்சியமளித்திருந்தனர். கடத்தப்பட்டனர்.
சாட்சியமளித்தவர்களில் நான்கு பேர் தவிர ஏனையோர் தமது பிள்ளைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் பலவந்த ஆள்சேர்ப்பின் மூலம் அவர்களுடன் இணைந்ததாகத் தெரிவித்தனர். தமது பிள்ளைகளை இறுதிப் போருக்கு முன்னர் நேரில் கண்டதாகவும், அதன் பின்னர் அவர்களுடனான தொடர்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தமது பிள்ளைகளை இராணுவத்தினர் கொண்டு சென்றதாகப் பார்த்தவர்கள் குறிப்பிட்ட தாகச் சாட்சியத்தில் மக்கள் குறிப்பிட்டனர்.
தமது பிள்ளைகளுடன் இருந்தவர்கள் தடுப்பின் பின்னர் இப்போதும் விடுவிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் எமது பிள்ளைகள் போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடையும் போது இருந்தாகவும் தெரிவித்தனர் எனச் சாட்சியமளித்த காணமற்போனோரின் உறவுகள் இதன்போது குறிப்பிட்டனர்.
விசாரணை மேற்கொள்ளப்படும்
இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட பின்னர் காணமல் போனவர்கள் தொடர்பில் இராணுவத்தினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும்.
அந்தச் சமயத்தில் குறித்த முகாமில் கடமையாற்றிய படைவீரர்கள் யார்?, முகாம் பொறுப்பதிகாரி யார்? என்பது விசாரணை செய்யப்பட்டு, பிள்ளைகளை கண்டுபிடிப்பதற்கு முழுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் பரணகம அங்கு உறவினர்களிடம் தெரிவித்தார்.
உயிருடன் உள்ளனர்
உங்கள் பிள்ளைகள் உயிருடன் உள்ளார்கள் என்று நம்புகின்றீர்களா ஆணைக்குழுவின் தலைவர் எழுப்பிய கேள்விக்கு, தமது பிள்ளைகள் இன்னும் உயிரோடுதான் உள்ளனர் எனச் சாட்சியமளித்த சகலரும் தெரிவித்தனர். அவர்களை எப்படியாவது மீட்டுத் தருமாறும் கண்ணீருடன் அவர்கள் கெஞ்சினர்.
இரு பெற்றோர் தமது பிள்ளைகள் தடுப்பில் இருக்கின்ற ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளதாகத் அதற்குரிய ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.
அவர்கள் தடுப்பில் இருப்பதாக ஒளிப்படங்கள் வெளியாகியுள்ள போதும், அவர்கள் எந்தவொரு இடத்திலும் இல்லையயன்று தாம் முறையிட்ட சகல இடங்களிலிருந்தும் பதில் கிடைத்துள்ளதாக அவர்கள் அங்கு கூறினர்.
எனவே அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்து தருமாறும், தாம் இது தொடர்பில் உண்மையை அறியப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைச் சந்திக்க ஏற்பாடு செய்துதருமாறும் உறவினர்கள் கோரினர்.
வெளிநாடுகளிலும் தேடுவோம்
எமக்குக் காணமற்போனவர்கள் என்று சமர்பிக்கப்பட்டுள்ள பெயர் விபரங்களை வைத்துக் கொண்டு இந்தியாவிலுள்ள அகதி முகாம்களிலும் வெளிவிவகார அமைச்சினூடாகத் தேடுதல் நடத்தப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் தெரவித்தார்.
பொருளாதர நிலை ஆராய்வு
காணமற் போனவர்களின் குடும்பத்தில் தற்போது எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்,காணமற்போனவரால் குடும்பத்தினருக்குக் கிடைத்த வருமானம், தற்போது வாழ்வாதாரத்துக்கான வருமானம் உள்ளிட்ட பொருளாதார நிலைமை தொடர்பிலும் தலைவரால் விளக்கமாகக் கேட்டறியப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களம் பதிவு
ஆணைக்குழுவின் அமர்வுகளில் சாட்சியமளித்த பின்னர், சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வருகை தந்த அதிகாரிகளால், முறைப்பாடுகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டன. காணமற்போனவர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகாகவே அவ்வாறு பதிவுகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
















