நஸ்ரியாவுக்கு அறிமுகம் தேவையில்லை..!
நய்யாண்டி படத்தில் நடித்தபோது ‘தொப்புள் புரட்சி’ செய்ததின் மூலம் ரசிக நினைவில் நிற்பவர்.
நய்யாண்டி, ராஜாராணி ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்த நஸ்ரியா, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாகிறது.
தவிர மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ‘வாய் மூடி பேசவும்’ என்ற தமிழ்ப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.
2006 ஆம் ஆண்டில் மலையாளப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா, பிறகு கதாநாயகியானார்.
மலையாளத்தில் நான்கு படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்தார்.
தற்போது, நான்கு மலையாளப்படங்களிலும் நடித்து வருகிறார்.
அசாத்தியமான அழகும், அதீதமான திறமையும் கொண்ட நஸ்ரியா, இன்னொரு நதியாவாக திரையுலகில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில்…
சற்றுமுன் ஒரு செய்தி கிடைத்தது நமக்கு…!
மலையாளப்பட உலகில் முன்னணி கதாநாயக நடிகரான ஃபஹத் பாசிலை திருமணம் செய்ய இருக்கிறார் நஸ்ரியா – என்பதே அந்த செய்தி!
இயக்குநர் ஃபாசிலின் மகனான ஃபஹத் ஃபாசில், சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஆண்ட்ரியா உடன் கிசுகிசுக்கப்பட்டவர். தற்போது மணிரத்னம் இயக்க உள்ள புதுப்படத்தின் ஹீரோவும் இவர்தான்.
நஸ்ரியாவோ ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த ஜெய் உடன் கிசுகிசுக்கப்பட்டார்.
ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக நஸ்ரியாவும் ஃபஹத் ஃபாசிலும் திருமண பந்தத்தில் இணைகின்றனர்.
நஸ்ரியா – ஃபஹத் ஃபாசில் இருவரும் நீண்டகாலமாகவே காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் விவகாரம் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால், திருமணம் செய்து வைக்க முன் வந்தனர் என்று கேள்வி.
நஸ்ரியா – ஃபஹத் ஃபாசில் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கிறது.
















