கமலை வெளியே விட்டால் எனக்கு நிச்சயம் ஆபத்து; றெக்ஷயனின் சகோதரி கதறல்

rexayanநெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் தானியேல் றெக்‌ஷயன் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தாம் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறனர் என்று அவரது சகோதரி றெஜீனா நேற்றுத் தெரிவித்தார்.

றெக்சியின் இறப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவர் இவரே. றெக்சியன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஈபிடிபியின் யாழ். மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கமல் எனப்படும் கந்தசாமி கமலேந்திரனை வெளியே நடமாட விட்டால் தனக்கும் குடும்பத்தினருக்கும் அது ஆபத்தானதாக மாறிவிடும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார்.

றெக்சியன் கொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது அங்கு றெஜீனா வந்திருந்தார். விசாரணைகளின் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். தனக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமானால் அதற்குக் கமல் தான் பொறுப்பாக இருப்பார் என்றும் குற்றஞ்சாட்டினார்.

“கமல் மாகாண சபை அமர்வுகளில் பங்கேற்றாலோ அல்லது பிணையில் விடுவிக்கப்பட்டாலோ அவர் அல்லது அவரது ஆள்கள் முலமாக எமக்கு எதிராகச் சதி செய்வார் என்றே எனது உள் மனம் எச்சரிக்கை செய்கிறது” என்றும் றெஜீனா கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

இது தொடர்பில் தானியேல் றெஜீனா மேலும் தெரிவித்ததாவது:

நாரந்தனை மத்தியில் நான் வசிக்கும் வாடகை வீட்டின் மீது கடந்த டிசெம்பர் 25ஆம் திகதி நள்ளிரவு 12 மணியளவில் யாரோ கல்வீசித் தாக்கினர். அது தொடர்பில் ஊர்காவற்துçப் பொலிஸாருக்கு தொலைபேசி முலமாகத் தெரியப்படுத்தினேன். அவர்கள் வந்து பார்த்து விட்டுச் சென்றனர்.

மறுநாள் அது தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றிருந்தேன். ஆனால் கல் எறிந்தவர்கள் யார் என்று தெரியாமல் முறைப்பாடு செய்ய முடியாது என்று கூறிப் பொலிஸார் எனது முறைப்பாட்டைப் பதிவுசெய்யவில்லை.

அதனால் பயத்தின் மத்தியில் திரும்பிச் சென்றுவிட்டேன். வீட்டை அண்மித்து நள்ளிரவில் மோட்டார் சைக்கிள்கள் நடமாடுகின்றது. இரவில் நாய்கள் குரைத்துக் கொண்டிருக்கின்றன. பயமாக உள்ளது. வீட்டில் இருப்பதற்குப் பயமாக இருக்கிறது. எமக்கு ஏதாவது துன்பம் விளைவித்து விடுவார்களோ என்ற அச்சத்தினாலேயே சாகிறோம்.

தானியேல் றெக்சியன் நவம்பர் 26ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அதற்கு முன்னரான நவம்பர் 4ஆம் திகதி அன்று தனது சகோதரியிடம் அவர் கொடுத்திருந்த கடிதத்தில் தனக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தனது மனைவியும் மாமியாருமே காரணம் என்று தெரிவித்திருந்தார்.

“தனது உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் இந்தக் கடிதத்தை நீதிபதியிடம் கொடு என்று அண்ணா என்னிடம் கூறி இருந்தார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டதும் அந்தக் கடிதத்தை தம்மிடம் தருமாறு வேறு ஆள்கள் என்னிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நான் மறுத்து விட்டேன். அதனாலேயே தற்போது எனக்கு அச்சுறுத்தலான சுழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்களால் பாதிப்புவரும் என்றே உள் மனம் கூறுகிறது. எனக்கு தொழில் வாய்ப்பும் இல்லை. அதனால் வறுமையால் பீடிக்கப்பட்டிருக்கிறேன்” என்று றெஜீனா மேலும் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply