பாராளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் 4 வாரங்களில் வெளியாக உள்ள நிலையில், பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஏப்ரல் – மே மாதம் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகிற நிலையில், நரேந்திர மோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகளின் பல்வேறு தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டதில் இது தெரிய வந்துள்ளது.
இதுவரையில் மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு இந்திய நகரங்களை குறி வைத்து குண்டு வெடிப்புகள் நடத்தி, பெருத்த உயிர்ச் சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்திய, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளும், தடை செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகளும் இதற்காக கூட்டுச்சதி செய்துள்ளனர்.
மோடியின் பிரசார கூட்டத்தில் குண்டு வெடித்து நாசவேலை அரங்கேற்ற சதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குறிபார்த்து துப்பாக்கிச்சூடு நடத்துவதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேருக்கு மோடியை சுட்டு வீழ்த்தும் வேலை தரப்பட்டுள்ளது.
இந்த 3 தீவிரவாதிகளும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். அவர்கள் லஷ்கர் இ தொய்பா மற்றும் இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இப்போது உளவுத்துறை மற்றும் போலீஸ் கண்காணிப்பு வளையத்தின் கீழ் உள்ளனர்.
மோடியை கொல்லும் பணி தரப்பட்டுள்ள 3 தீவிரவாதிகளில் ஒருவன், இந்திய முஜாகிதீன் தீவிரவாதி ஹைதர் அலி ஷக்கூர் என்பதுவும் தெரிய வந்துள்ளது. இந்தப் பணியில் அவன் சிமி இயக்கத் தீவிரவாதிகளின் உதவியையும் நாடி உள்ளதாக கூறப்படுகிறது.
சிமி இயக்கத் தீவிரவாதியான அபு பைசல் என்பவன் கடந்த அக்டோபர் 1 ஆம் திகதி மத்திய பிரதேச மாநிலம், கந்த்வா சிறையில் இருந்து தப்பினான். அவன் மறுபடியும் டிசம்பர் 24 ஆம் திகதிபிடிபட்டான். இடைப்பட்ட காலத்தில் அவன் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது.
மேலும், மோடியை கொல்வதற்காக அவன் ஸ்புல் முஜாகிதீன் மற்றும் தெஹ்ரிக் இ தலீபான் தீவிரவாதிகளை தொடர்பில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
மோடியை தீர்த்துக் கட்டுவதற்காக குறிபார்த்து சுடுவதில் நிபுணத்துவம் பெற்ற தீவிரவாதிகள்,நேபாள நாட்டின் வழியாக இந்தியாவுக்குள் வரவும் திட்டம் போட்டுத் தரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் கண்காணிப்பு பணிக்காக பொலிஸ் படை நேபாளம் விரைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மோடியின் பொதுக்கூட்டங்கள் அனைத்திலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்படுவதாகவும், உச்சக்கட்ட உஷாராக இருக்கும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய உளவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பீகார் மாநிலம், பாட்னாவில் கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதிநரேந்திர மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்ததும் அதில் 6 பேர் கொல்லப்பட்டதும், 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததும் நினைவு கூரத்தக்கது.
















