பொறுமை இழக்கிறது அமெரிக்கா; கொழும்புக்கு நிஷா தேசாய் எச்சரிக்கை

nishaஇலங்கை தொடர்பிலான தனது பொறுமையை அமெரிக்கா இழந்து வருவதாக சனிக்கிழமை கொழும்பில் எச்சரித்தார் அந்த நாட்டின் இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான செயலர் நிஷா தேசாய்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடை நிறைவேற்ற முயலும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்புக்காக இலங்கை வந்தார் நிஷா தேசாய். யாழ்ப்பாணத்துக்கும் வருகை தந்த அவர் பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தார்.

தனது பயண முடிவில் கொழும்பில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
இலங்கையில் அனைத்துத் தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்களை நடத்தியுள்ளேன். இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெளிவுபடுத்தியுள்ளேன்.

மக்கள் உறவு
இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால உறவு என்பது, இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலானது என்ற அமெரிக்க நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

நீதி, நல்லிணக்கம், போரின்போது இடம்பெற்ற சம்பவங்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அரசு போதுமான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அமெரிக்க அரசின் கவலைகள் இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு விசாரணை
போரின் விளைவாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக, இலங்கை தானே நம்பகமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கே அமெரிக்கா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை அரசு முன்னேற்றம் காட்டவில்லை என்பதால் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நிலைமை மோசம்
இலங்கையில் மனித உரிமைகளுக்கான மதிப்பு மோசமடைந்து வருகின்றமை கவலையளிக்கிறது. சிறுபான்மை மதங்களிற்கு எதிரான தொடர் தாக்குதல்கள், சட்டத்தின் ஆட்சி சீர்கெட்டு ஊழல்களும் சட்டத்தின் பிடியில் குற்றவாளிகள் சிக்காத தன்மையும், ஜனநாயக பாரம்பரியத்தின் பெருமையை சீரழிக்கிறது.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் ஏற்கமுடியாது. எனவேதான் இலங்கையில் நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அடுத்த மாதம் மூன்றாவது தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வரும்.

அந்தத் தீர்மானத்தில் எந்தவகையான வாசகங்கள் இருக்கும் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது. எனினும், அது இலங்கை மக்களின் நட்புணர்வுடன் இசைந்து போவதாக இருக்கும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: ,

Leave a Reply