தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தென்னாபிரிக்காவுக்கு வருகை தரும் என்று அந்த நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் தெரிவித்திருந்த நிலையில், அவ்வாறான எந்த அழைப்புக்களும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கை அரச குழு வொன்று தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விரைவில் தென்னாபிரிக்காவுக்கு வருகைதரும் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்ட போதே சம்பந்தன் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றியிருந்த தென்னா பிரிக்கா ஜனாதிபதி ஜேக்கப் சூமோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து பேசியிருந்தார். இந்தச் சந்திப்பின்போது இருதரப்பும் தென்னாபிரிக்கா சென்று அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பினர்’ என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் பி.பி.சி. செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையிலேயே, அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை தென்னாபிரிக்காவுக்குப் பயணமாகியுள்ளனர். அரச குழுவைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விரைவில் தென்னாபிரிக்கா வரவுள்ளதாக இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவ்வாறானதொரு எந்த அழைப்பும் தங்களுக்கு கிடைக்க வில்லை. அவ்வாறான நிகழ்சி நிரலே இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ‘உதயனிடம்’ தெரிவித்தார்.
இதேவேளை கடந்த வருடம் தென்னாபிரிக்கப் பிரதி வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த பின்னர் கருத்து வெளியிட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், தென்னாபிரிக்காவின் அணுகுமுறைகளில் சந்தேகம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெனிவா அமர்வுகள் நெருங்கி வரும் நிலையில் தென்னாபிரிக்கா இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.
















