வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் மீண்டுமொரு அழிவை கொண்டு வருவதற்கான சமிக்ஞையாகவே தென்படுகிறது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
வட மாகாண மக்கள் முறையான அடிப்படை வசதிகளின்றி பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள். அவர்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்டு.
வட மாகாணத்திற்கு தனியான கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதாலோ, விமான சேவைகளை ஆரம்பிப்பதாலோ தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக முறையானதும் தூர நோக்குடனுமான வேலைத் திட்டங்களே முன்னெடுக்கப்பட வேண்டும்.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தினால் இன, மத பேதமின்றி எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள். அது மாத்திரமல்லாமல் வட ,கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கினார்கள். எனவே அந்த நிலைமை மீண்டும் ஏற்படும் வகையில் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் மிகவும் பயங்கரமானதும் பாரதூரமானதுமாகவே உள்ளன. இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டில் மீண்டும் பிரிவினை வாதமும் தேவையற்ற பிரச்சினைகளுமே ஏற்படும். எனவே அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்க கூடாது.
வடமாகாணத்திற்கான தனியான விமான மற்றும் கப்பல் சேவை என்ற பேச்சுக்கே இடமில்லை. அதனை ஒரு போதும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதே போன்று பிரபாகரனின் ஆவியாக செயற்பட்டுவரும் விக்னே௧ஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையிலேயே விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளானது தமிழ் மக்களை மீண்டும் முப்பது வருடங்களுக்கு பின்னோக்கிக் கொண்டு செல்லும் வகையிலேயே அமையும்.
வட மாகாணத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடம் இனவாதம் கிடையாது.
விக்னேஸ்வரன் போன்றவர்களின் செயற்பாடுகளாலும் கருத்துக்களாலும் அந்த ஒற்றுமை சீர்குலையும் அபாயம் உள்ளது. எனவே, இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















