இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள காட்டமான பிரேரணைக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவைத் தேடி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளே நேரடியாகக் களமிறங்கி யுள்ளனர்.
ஜெனிவாவில் இலங்கை மீது கொண்டு வரும் பிரேரணைக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிற்போடப்பட்ட பயணம்
எதிர்வரும் 4 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை பெங்களூர் மற்றும் டில்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாகப் பிஸ்வால் கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.எனினும் இந்தியத் தூதரக அதிகாரி தேவ்யானி அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து, ஏற்பட்ட சுமுகமற்ற சூழலால் அவரது பயணம் பிற்போடப்பட்டது.
ஆலோசனை நடத்தப்படும்
கடந்த ஆண்டு தெற்கு, மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவியேற்ற பின்னர் பிஸ்வால் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதற் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின் போது. அவர் இருதரப்பு விவகாரங்கள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்.
இதன்போது இலங்கை விவகாரமும் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.இந்த மாதம் ஐ,நா. மனித உரிமைகள் சபை யில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது.இதற்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்தப் பயணத்தைப் பிஸ்வால் பயன்படுத்திக் கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன.
கடந்த மாத முற்பகுதியில் இலங்கைக்குப் பயணம் மேற் கொண்டுவிட்டு, ஜெனிவா சென்றிருந்த பிஸ்வால் இலங் கைக்கு எதிரான தீர்மானம் குறித்து ஜெனிவாவுக்கான இந்தியத் தூதுவர் திலிப்சின் ஹாவுடன் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
















