அரசின் தப்புக்கணக்கு இப்போது திணறிப் பயன் ஏதுமில்லை

sri_lanka_flagஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நெருங்கிவருகிறது. இலங்கைக்கு எதிரான பிரேரணையும் கொண்டு வரப்பட உள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நெருங்கிவருகிறது. இலங்கைக்கு எதிரான பிரேரணையும் கொண்டு வரப்பட உள்ளது. ஏற்கெனவே இரண்டு தடவைகள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக் கூறலுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தும் அவற்றை இலங்கை உதாசீனம் செய்துவிட்டது என்ற கருத்து உலகநாடுகளிடையே பரவலாகக் காணப்படுகின்றது.

எனவே மூன்றாவது தடவையாகக் கொண்டுவரப்பட விருக்கும் தீர்மானம் கடுமையானதாகவும், இலங்கையைப் பணியவைப்பதாகவும் அமைய வேண்டுமென அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய இரண்டு நாடுகளும் திட்டமிடுகின்றன.

உலக ஒழுங்குகளைத் தீர்மானிக்கவல்ல நாடுகளுடன் இம்முறை இந்தியாவும் இணைந்து கொள்வது உறுதியாகிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கு எதிராக அமையவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தருவதென முடிவுசெய்திருக்கிறது.

இம்முறை ஏறத்தாழ நாற்பது நாடுகள் தமது பிரேரணைக்கு ஆதரவளிக்கலாம் என அமெரிக்கா நம்புகிறது. ஆதரவு நாடுகளின் எண்ணிக்கை நாற்பதைத் தொடத்தவறினும் கடந்த ஆண்டுகளைவிட இவ்வாண்டு இலங் கைக்கெதிரான தீர்மானம் அதிக நாடுகளின் ஆதரவைப் பெறும் என்பது திண்ணம்.

இலங்கை அரசின் சிந்தனை வேறு
இலங்கை அரசோ, வேறு விதமாகச் சிந்திக்கிறது. இந்தப் பொறியிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்ளலாம் என்பதன் அடிப்படையிலேயே தனது இராஜதந்திர நகர்வுகளை மேற் கொண்டுவருகிறது. பொறுப்புக் கூறும் கடப்பாட்டை, இறைமை, சுதந்திர நாடு, உயர்ந்த நீதிக்கட்டமைப்பு என்பவை போன்ற வார்த்தைகளால் திசை திருப்பிவிட முயல்கிறது.

சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் தனக்குத் துணையாக இருக்கும் போது, ஏனைய நாடுகளால் அப்படி என்னதான் செய்துவிட முடியும் என்பதைப் பார்ப்போம் என்ற தோரணையில் செயற்பட்டு வருகிறது.

ஜெனிவாவில் தனக்கெதிராகக் கொண்டு வரப்படுகின்ற நகர்வுகளையயல்லாம் உயர் அரசியல் மூலதனங்களாக மாற்றுவதில் இலங்கையின் ஆட்சியாளர்கள் வெற்றிபெற்றே வருகிறார்கள். இம்முறை கூட ஜெனிவாவின் நெருக்குதல்கள் தெற்கு, மேற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் அரச கட்சியின் வெற்றிக்கான அடித்தளங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதியின் செயற்றிறமை, இலங்கையின் அபாரவளர்ச்சி ஆகியவற்றைக்கண்டு உலக நாடுகள் பொறாமைப்பட்டு இலங்கையின் கட்டமைப்பைச் சிதைக்க முயல்கின்றன, அதனை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்ற பரப்புரைகளே அமைச்சர்களாலும் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகையே எதிர்த்து நிற்கும் தைரியம் கொண்ட ஜனாதிபதிக்கு மக்கள் ஆதரவு தருவதுதான் நியாயம் என்ற மாயை தெற்கு, மேற்கு மாகாணங்களில் பரப்பப்பட்டு வரு கின்றது.

புலிகளுக்கெதிரான செயற்பாடுகளுக்கு மக்களிடம் ஆதரவு கேட்ட ஆளும் தரப்பினர் 2009க்குப் பின்னர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக ஆரம்பித்து, இப்போது உலகநாடுகளின் அபிப்பிராயங்களை முறியடிக்க மக்கள் ஒன்றுசேர வேண்டும் என்று அறை கூவல் விடுத்து, அதில் உள்ள வெற்றிகளையும் அனுபவித்து வருகிறார்கள்.

இந்தப் பரப்புரைகளோ வெற்றிகளோ உலகஅரங்கில் இலங்கையின் நிலையைத் தீர்மானிக்கப் போவதில்லையயனினும், இவைதாம் அரசுக்கு உலக அரங்கில் வலுச்சேர்க்கும் காரணிகளெனச் சிங்களமக்களை அரசு நம்ப வைத்துக்கொண்டிருக்கிறது.

உலக அபிப்பிராயங்களுக்குக் கட்டுப்படாதவர் என்றும், இறைமையுள்ள நாட்டின் ஜனாதிபதி என்ற முறையிலும் தமது ஜனாதிபதி சிறப்பாகச் செயற்படுகிறார் என்றும் தென்னிலங்கையில் நம்பிக்கைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

தமிழர்கள் தலை நிமிராதபடி பார்த்துக்கொள்வதில் இவரைவிடச் சமர்த்தர் இலங்கை அரசியலில் யாரும் இல்லை என்ற எண்ணமும் தென்னிலங்கை மக்களிடையே விதைக்கப்பட்டிருக்கிறது.

தமிழர்களையே அடக்கி வைக்கும் ஜனாதிபதியின் பலத்துக்கு முன்னால் முஸ்லிம்கள் எம்மாத்திரம் என்ற அலட்சியப் பார்வையும் சிங்கள மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது.

இம்முறை ஐ.நா. மன்றத் தீர்மானத்தை தனது இராஜதந்திர நகர்வுகள் மூலம் முறியடித்துவிட முடியுமென இலங்கைப் பேச்சாளர்கள் கூறிக்கொண்டாலும், உண்மை அவ்வாறிருக்கப் போவதில்லை என்பது இலங்கைக்கு நன்றாகவே தெரியும்.

எனவே அமெரிக்காவின் முன் மொழிவை ஆதரிக்கும் நாடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து விடவும், தம்மீது இரக்க உணர்வொன்றை ஐ.நா மன்றத்தில் தோற்றுவிக்கவுமே இப்போது இலங்கை முயன்று வருகிறது.

பெளத்த விகாரையில் பிரித் ஓதும் வைபவம்
இதற்கு முன்னோடியாக ஜெனிவா நகரத்திலுள்ள பெளத்த விகாரையில் தினமும் பிரித்தோதும் வைபவம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜெனிவா அரங்கில் இலங்கையின் நியாயங்களுக்கு வெற்றிவாய்ப்புக் கிடைப்பதற்கான இறைவேண்டுதலாகவே இது அமைந்திருக்கிறது.

இலங்கையிலிருந்து ஒரு லட்சம் கையயழுத்துகள் திரட்டப்பட்டு ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான வேலைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. இதற்கான தொடக்க நிகழ்வு வெல்லம் பிட்டியவில் இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதியும் அமைச்சர்களும் தமக்கு ஆதரவுவேண்டி வெகுதீவிரமாக உலக நாடுகளை வலம் வரத் தொடங்கியிருக்கிறார்கள். முஸ்லிம் நாடுகளைக் கவர்ந்திழுப்பதற்கான உத்திகளும், ஆபிரிக்க நாடுகளை வசியம் செய்யும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இவற்றோடு சார்க் ஒன்றியத்தை தமது வலைக்குள் சிக்கவைக்கலாமா என்று இலங்கை அரசு யோசிக்கிறது. சார்க் நாடுகளில் இந்தியா. பாகிஸ்தான். மாலைதீவு அகிய நாடுகள் மனித உரிமைகள் விவகாரத்தில் வாக்களிக்கத்தக்க நாடுகளாக இருக்கின்றன.

ஏற்கெனவே பாகிஸ்தான் இலங்கை பக்கமே நிற்கிறது. மாலைதீவும் இலங்கையுடன் நிற்கவே விரும்புகிறது. இந்த நிலையில் சார்க் நாடுகளின் ஒற்றுமை என்ற பெயரில் இந்தியாவை வளைத்து விடலாம் என்றுதான் இலங்கை முயல்கிறது.

இந்தியாவைத் தம்பக்கம் இழுக்கும் தந்திரம்
இந்தியாவைத் தம்பக்கம் இழுப்பதில் இலங்கை வெற்றிகாணுமாயின், இலங்கையின் இராஜதந்திர நகர்வுகளுக்குக் கிடைக்கும் பெரிய வெற்றியாக அது அமையலாம். ஆனால் நடைமுறையில் இம்முயற்சி வெற்றிப்பெறப் போவதில்லை. மன்மோகன்சிங் அரசு மனதார விரும்பினாற்கூட, இலங்கைக்கு ஆதரவளிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது.

இலங்கையின் நல்லெண்ணத்தை விடத் தமிழ்நாட்டின் வாக்குவங்கியே காங்கிரஸ் கட்சிக்கு இன்று முக்கியம். இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் ஒருபோதும் இந்திய, மத்திய ஆளுங்கட்சி தன்கையைச் சுட்டுக்கொள்ளும் முயற்சியில் இறங்கப்போவதில்லை.

ஆனாலும், சீனா என்ற துருப்புச்சீட்டைப் பயன்படுத்தி இந்தியாவைப் பணியவைக்க முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை கைவிடுவதாக இல்லை. இம்முறை தமிழர் தரப்பிலும் ஜெனிவாவுக்கான முன்நகர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தமது செல்வாக்கை உச்சமாகப் பயன்படுத்தி வருகின்றன.

இலங்கையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாயத்த வேலைகளுக்காகச் சென்றுள்ளது. ஜெனிவா மாநாடு நெருங்கும் சமயத்தில் இவர்கள் அங்கேயே நின்று பரப்புரைகள் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஜெனிவா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் நாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற போதிலும், அதற்கு முன்னர் இடம்பெறும் கலந்துரையாடல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்குபற்றித் தமது கருத்துகளைத் தெளிவாக முன்வைக்க முடியும் எனத் தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.
இவர்களுக்குத் துணையாகப் புலம்பெயர்தமிழர் அமைப்புகளும் நிற்கின்றன.

தமிழர் பிரச்சினை உலக அரங்கில்
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் முன்னெப்போதையும் விடத் தமிழர் பிரச்சினை வேகமாக உலக அரங்கில் தலையயடுத்துள்ளது. தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்படல் வேண்டும் என்ற உணர்வு உலகநாடுகளிடையே காணப்படுகிறது. தமிழர்களுக்காகப் பேசவல்ல உரிமையை இலங்கை அரசாங்கம் உலகமட்டத்தில் இழந்து வெறுங்கையாக நிற்கிறது.

அரசு என்ற உரிமையை வைத்துக்கொண்டுதான் அதன் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. அரசுக்கு நிகரான அந்தஸ்தைச் சட்டரீதியாக அல்லாவிடினும், இயற்கை நியாயப்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கிறது.

இந்தக் காரணங்களால் தான் இலங்கை அரசாங்கத்திடம் வருகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகள் எதிர்க்கட்சியைச் சந்திக்கிறார்களோ இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையையும், வடக்குமாகாண முதலமைச்சரையும் தவறாது சந்தித்துப் பேச்சு நடத்துகிறார்கள்.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், மனித உரிமைகளுக்கான ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை ஆகிய உலகமட்டத் தலைவர்கள் வடபகுதியிலுள்ள சாதாரண பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிகிறார்கள்.
இது இராஜதந்திரரீதியாக இலங்கை அரசுக்குக் கிடைத்த பெரிய பின்னடைவு ஆகும்.

மனவலிமை மட்டுமே எஞ்சி உள்ளது
2009 அவலத்துக்கு முன்னர் தமிழர்களிடம் ஆயுதவலிமை இருந்தது. அதன் பின்னர் மனவலிமை மட்டும்தான் எஞ்சியிருந்தது. இலங்கை அரசாங்கம் நேர்மையாக நடந்துகொண்டிருக்குமானால், பிரச்சினை இவ்வளவுதூரம் பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது.

தமிழர்களும் உலகமட்டத்தில் செயல்பட முடியாது போயிருக்கும். ஆனால், அரசாங்கம் தமிழர்களின் மனவலிமையை உணராது போட்ட தப்புக் கணக்குத்தான் இன்று இலங்கைக்கு இடையூறுகளை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு ஆயுத பலமும் முடக்கப்பட்டதால் தமிழர்கள் சோர்ந்து விடுவார்கள், தாம் நினைத்தபடி அவர்களை ஆட்டி வைக்கலாம் என எண்ணி அரசு நடந்து கொண்டதன் விளைவுகளைத் தாம் இப்போது அரசு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

Tags: ,

Leave a Reply