அனைத்துலக நியமங்களை ஏறெடுத்துப் பார்க்காத நிலை தொடரின்…

un_geneva_flagsஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் இன்னமும் மூன்று நாள்களில் ஜெனிவாவில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் இன்னமும் மூன்று நாள்களில் ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இணைந்து, இந்தக் கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில் இலங்கை மீதான காட்டமான பிரேரணையைக் கொண்டு வர உள்ளன.

கடந்த வருடத்தில் கூட்டத்தொடரில் இலங்கை மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், மனித உரிமைகள் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை நிறைவேற்ற காலஅவகாசமும் வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு அவற்றில் மிகப் பலவற்றை செயற்படுத்த முனையவில்லை, சிலவற்றை மட்டும் நிறைவேற்றி முக்கியமானவற்றை செயலாக்க மனமின்றிப் பதினொரு மாதங்களைக் கடத்திவிட்டது.

அதனால் அடுத்த மாதத்தில், நாட்டுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தவல்ல, காட்டமான, காத்திரமான பிரேரணையைக் கொண்டு வர ஏற்பாடாகி வருகிறது.
அதற்கான முன்னோட்டம் என்று கருதவல்ல சங்கதி ஒன்றை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கட்டவிழ்த்துச் சென்றார்.

இலங்கைக்கு வருகை தந்திருந்த, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் என்று மறைமுகமாக எச்சரிக்கை செய்திருந்தார்.

அவர் வடக்குக்கும் பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு கூடவுள்ள இவ் வேளையில், அவரது எச்சரிக்கை வகை சார்ந்த சொற்கள் கொழும்பு ஆட்சி பீடத்தினரை உலுக்கி உள்ளதாகத் தோன்றுகிறது.

இலங்கை மீதான பொருளாதாரத் தடைக்கு அஞ்சப் போவதில்லை என்று அமைச்சர்கள் சிலர் கெட்டித்தனம் பேசினாலும் கூட, மொத்தத்தில் அரசுக்கு உள்ளார்ந்த அச்சம் உண்டு என்பதனை மறைக்க முடியவில்லை.

மூத்த அமைச்சர்களில் ஒருவரான திஸ்ஸ விதாரண, இலங்கை மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் சாத்தியம் உண்டு என்று எச்சரிக்கைத் தொனியில் முன்பொரு தடவை கருத்து வெளியிட்டிருந்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஜெனிவாக் கூட்டத் தொடரின் பின்னர், இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் ஆபத்துக் காத்திருக்கின்றது என்று அண்மையில் மீண்டும் அவர் அழுத்திக் கூறியிருக்கிறார்.

அவர் அதற்கான தக்க காரணத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம். அதனால், இலங்கை மீதான பொருளாதாரத் தடையை அவர்கள் கையில் எடுக்கலாம் என்று அமைச்சர் “”எதிர்வு” கூறியுள்ளார்.

முன்னர் ஒரு தடவை, அவர் இலங்கை மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை குறித்து கருத்து வெளியிடும் போது வெளிக்கொணர்ந்த அம்சமும் ஞாபகத்தில்-கவனத்தில் கொள்ளத்தக்கது.

அமெரிக்காவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுமே எமது ஏற்றுமதிப் பொருள்களில் அறுபது சதவீதத்தை கொள்வனவு செய்கின்றன. அவை எமது நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் பட்சத்தில், இந்த நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய வீழ்ச்சியைக் காணும் என்பது திண்ணம் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

இப்போது, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் இரு பத்தி மூன்று சதவீதத்தை அமெரிக்கா கொள்வனவு செய்கிறது. அந்த நாட்டுடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கை கோர்த்தால், இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்குச் சென்று விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

போரின் இறுதிப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு இலங்கைக்கு வழங்கப்பட்ட அவகாசம் போதுமானது என்பதே அனைத்துலக சமூகத்தின் நிலைப்பாடு.

அதற்கும் கூடுதலாக அவகாசம் கோருவது குற்றச்சாட்டுகளில் இருந்து தப்புவதற்கே வழிவகுக்கும் என்று அமெரிக்காவும் அதற்கு ஆதரவான மேற்கு நாடுகளும் கருதுகின்றன.

இதனைக் கருத்தில் கொள்ளாமல், அனைத்துலக நியமங்களையும் விழுமியங்களையும் ஏறெடுத்தும் பார்க்காமல், ஒரு சில நாடுகளின் உதவி கொண்டு, தமது சிந்தனைகள் யாவற்றையும் செயலாக்கலாம் என்று அரசு நினைக்கிறது.

அனைத்துலக நியமங்களைத் தொட்டுப்பார்க்கவும் இசையாத போக்கையே அது கோடி காட்டுகிறது. இது நாட்டினதும் மக்களினதும் முன்னேற்றத்துக்குக் கவ்வைக்கும் உதவாது.

Tags: , ,

Leave a Reply