ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரால் தமிழ் மக்களின் மீள்குடியமர்வு தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தகவல்கள் சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் சபையில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், வடக்கு கிழக் கில் இன்னமும் 7 ஆயிரத்து 500 பேர் வரையிலேயே மீளக் குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த ஜனவரி மாத இறுதியில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அங்கு வைத்து ஏ.எவ்.பி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர் காணலில், போரினால் இடம் பெயர்ந்த 3 லட்சம் மக்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னமும் 50 ஆயிரம் பேர் வரையிலேயே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி கடந்த 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வவுனியாவில் வைத்து உரையாற்றுகையில், இலங்கையில் இடம் பெயர்ந்தவர்கள் என்று யாருமே இல்லையென தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே மீள்குடியமர்வு தொடர்பில் ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்திலேயே வலி. வடக்கைச் சேர்ந்த 9 ஆயிரத்து 905 பேர் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்று தெல்லிப் பழை பிரதேச செயலக அரச ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும், வெளிவிவகார அமைச்சர் சர்வதேச மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு பிழையான தகவல்களை வழங்கியுள்ளார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

















