தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் அமைப்பே கொலை செய்தததாக கூறியிருந்தார்.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்திடம் பாஜக துணை தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி புகார் அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தவறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் ஹிந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே மோதல், பகையை பாஜக ஏற்படுத்தி வருகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே ராகுலின் நோக்கமாக இருக்கிறது.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக அவரது கருத்துகளை நியாயப்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் இதுபோன்ற கருத்தை தெரிவித்ததற்காக ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் கண்டித்தது. மீண்டும் அதுபோல் நடக்கக் கூடாது என ராகுல் காந்தியிடம் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையை ராகுல் காந்தியும் பிற காங்கிரஸ் தலைவர்களும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
எனவே, தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறிவரும் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
















