காவலரன்களும் இராணுவ முகாம்களும் குறைக்கப்பட்டுள்ளதே தவிர இராணுவ எண்ணிக்கையில் குறைப்பு ஏற்படவில்லை. அவர்கள் வன்னிக் காட்டுப்பகுதிக்குள் முகாம் அமைத்து வாழ்ந்து கொண்டுள்ளனர் இந்த நிலையில் வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட்டாதாக அரசாங்கம் தெரிவித்து வரும் கூற்றினை நாம் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என வடக்கு மாகாண அமைச்சர்கள் கூட்டாக இணைந்து ஆஸி.குழுவினரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார திணைக்களம் மற்றும் வர்த்தக பிரிவைச் சேர்ந்த ஜோன் பொனார் உள்ளிட்ட குழுவினர் வடக்கு அமைச்சர்களான குருகுலராசா மற்றும் ஐங்கரநேசன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினர்.
அதன்போது படை குறைப்பு தொடர்பில் அவுஸ்திரேலிய குழுவினரால் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்ததாக விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இராணுவத்தினருடைய பிரசன்னம் வடக்கில் குறைத்துள்ளதாக அரசாங்கத்தினால் கூறப்பட்டு வருகின்றது. உங்களுடைய கருத்து என அவர்கள் எங்களிடம் கேட்டனர். அதற்கு சிறு காவலரன்களை மட்டுமே அரசாங்கத்தினால் மூடப்பட்டுள்ளது. இவ்வாறாக சிறிய காவலரன்களை மூடி விட்டு படைக்குரைப்பு செய்ததாக அரசு கூறிவருகின்றது.
எனினும் இராணுவத்தினர் எங்கும் போகவில்லை . வன்னிக்காட்டுப் பகுதிகளுக்குள் முகாம்களை அமைத்து தங்கியுள்ளனர். காவலரன்கள் மற்றும் படைமுகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் இராணுவத்தினரது எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதாக கூறுவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தோம்.
மேலும் உங்களால் முடியுமாக இருந்தால் அவுஸ்திரேலியா அரசின் ஊடாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தமிழ் பிரதேசங்களில் இருந்து இராணுவத்தை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என கோரிக்கையும் விடுத்துள்ளோம் என்றார்
















