இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவின் முறைசாரா பகிரங்கக் கலந்தாய்வில் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. அதன் போது சுவிட்ஸர்லாந்து பெறுமதியான மேலும் பல திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், இலங்கையின் நிலைமைகள் குறித்தும் வாதிட்டது.
இந்தப் பகிரங்கக் கலந்தாய்வில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உறுப்பு நாடுகளின் பார் வைக்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் விநியோகிக்கப்பட்ட திருத்தப்பட்ட இரண்டாவது தீர்மான வரைவின் உள்ளடக்கம் குறித்து விரிவாக பேசப்பட்டது.
அதில் பெரும் பாலான மேற்குலக நாடுகள் தீர்மான திருத்தத்தினை வரவேற்றிருந்ததோடு, பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவு தெரிவித்தன. சுவிட்ஸர்லாந்து, கனடா, பிரிட்டன், இத்தாலி, ஜேர்மன், இன்னும் பல நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசு மீது சர்வதேச பொறி முறை ஏற்படுத்த வேண்டும் எனும் அர்த்தத்தில் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
43 நாடுகள் பங்கெடுத்திருந்த இக் கலந்தாய்வில் சிவில் அமைப்பினரும் பங்கெடுத்து கருத்துக்களை வழங்கியிருந் தனர். 30க்கும் மேற்பட்ட தமிழர் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருந்தனர். மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறீதரன், மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜெந்திரகுமார் பென்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான குருபரன், மணிவண்ணன், பிரதீப் எக்னலிகொடவின் மனைவி, நிமல்கா பெர்னான்டோ ஆகிய பிரதிநிதிகளுடன் இலங்கைத் துதரக அதிகாரிகளும் பங்கெடுத்திருந்தனர்.
இரண்டு மணிநேரம் வரை நீடித்த இந்தக் கலந்தாய்வில் இலஙகையைக் காப்பாற்றும் முகமாக கியூபா, ரஷ்யா, எகிப்து, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் தீர்மானத்தினை பலவீனப்படுத்தும் வகையில் தொடர்சியாக கருத்துக்களை முன்வைத்திருந்திருந்தனர்.
குறிப்பாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் தேசிய மட்டத்திலான செயற்திட்டம் இருக்கும் நிலையில் அனைத்துலகத்தின் உள்நுழைவு அவசியமற்றது எனவும் அவை வாதிட்டன. இலங்கை மீது விசாரணையினை மேற்கொள்வதற்கான அதிகாரம் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளருக்கே உண்டென்றும், அவரது அலுவலகத்திற்கு இல்லை என கியூபா கருத்துரைத்தது.
இந்தியாவின் சார்பாக கீழ்நிலை அதிகாரி ஒருவர் பங்கெடுத்திருந்ததார். அவர் கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.
இக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன் மற்றும் நிமல்கா பெர்னான்டோ ஆகியோர் இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் தொடர்பில் இக் கலந்துரையாடலில் கருத்துரைத்தனர்.
குறித்த கலந்துரையாடல் இடம்பெற்ற போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பின்புறம் அமர்ந்திருந்து கலந்துரையாடல் முழுவதையும் அவதானித்ததுடன் சில வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்தித்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது

















