புழல் சிறையிலிருந்து விடுதலையாகி 10 கார்களில் நசரத்பேட்டை பகுதிக்குள் நுழைந்தார் ‘திடீர்’ வீரலட்சுமி. யார் இந்த வீரலட்சுமி என்கிறீர்களா? சத்தியமூர்த்தி பவன் முற்றுகைப் போராட்டம், கலவரமாக மாறிக் கல்வீச்சு, அடிதடி வரை போன சம்பவம் நினைவிருக்கிறதா? சத்தியமூர்த்தி பவனைத் தாக்கியதாகக் கைதான ‘தமிழர் முன்னேற்றப் படை’யின் தலைவிதான் இந்த வீரலட்சுமி.
”இன்று சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் எங்கள் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றலாம் என்று முடிவு செய்துள்ளேன். ‘அகில இந்திய தமிழர் கட்சி’ என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறோம்” என்று எடுத்தவுடனே அதிர்ச்சி கொடுத்தார்.
”இதற்கு முன்னர் வேறு அமைப்புகளில், அரசியல் கட்சிகளில் இருந்துள்ளீர்களா?”
”இல்லை. நான் எந்த அமைப்புகளிலும் இருந்ததில்லை. நான் அடிப்படையில் தொழிற்சங்கவாதி. தொழிற்சங்கத் தலைவராக இருந்துள்ளேன். சுதந்திர இந்திய தேசியத் தொழிலாளர் சங்கம் என்கிற தொழிற்சங்கம் அது”
”சரி உங்கள் புதிய கட்சியின் கொள்கைகள் என்ன?”
”தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்வதும் தமிழனை தமிழனே ஆள வேண்டும் என்பது தான் எங்கள் அடிப்படைக் கொள்கை.”
”தமிழன் ஆள்வதால், எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்கிறீர்களா?”
”ஆமாம். இங்கே பிரச்னையே தமிழனைத் தமிழனே ஆளாமல் இருப்பதுதான். ஒரு பச்சைத் தமிழன் ஆண்டால் போதும். மற்ற பிரச்னைகள் முடிவுக்கு வரும்.”
”நாராயணசாமி, ஞானதேசிகன், ப. சிதம்பரம் இவர்களும் தமிழர்கள்தானே?”
”எப்போதுமே எல்லா இனத்திலும் துரோகிகள் உண்டு. தமிழர்களுக்கு இவர்கள். இவர்களை அம்பலப்படுத்தத்தான் திருப்பெரும்புதூர் தொகுதியில் நிற்கிறேன். தமிழ் தேசிய அரசியலுக்குப் பின்னடைவை ஏற்படுத்திக்கொடுத்த இந்தத் தொகுதியில் இருந்துதான் அதை மீட்க வேண்டும்.”
”பிற தமிழ் தேசிய அமைப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள், அவர்களும் நீங்களும் கிட்டத்தட்ட ஒரே கொள்கை என்றால் உங்களுக்கு ஏன் தனியாக ஒரு அமைப்பு?”
”அவர்களை எங்களின் தோழமை அமைப்பாகத்தான் பார்க்கிறேன். ஓட்டு அரசியல் என்கிற இடத்தில் அவர்களின் பங்களிப்பு இல்லாததால், அரசியல் பயணத்தில் நாங்கள் வேறு, அவர்கள் வேறு.”
”அன்று சத்தியமூர்த்திபவன் முற்றுகை போராட்டத்தில் என்னதான் நடந்தது?”
”சத்தியமூர்த்தி பவனை நோக்கி முற்றுகையிடத்தான் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போனோம். என் தலைமையில் 1,000 பேர் அணிவகுத்துச் சென்றோம். சோனியாவின் உருவ பொம்மையையும் கொளுத்தினோம். அப்போது கராத்தே தியாகராஜன் தலைமையில் 300 பேர் சத்தியமூர்த்தி பவனுக்குள்ளிருந்து தயாராக வைக்கப்பட்டிருந்த கற்களைக்கொண்டும் ட்யூப் லைட்டுகளைக்கொண்டும் தாக்கினர். அதில் ஒரு போலீஸ்காரர் தாக்குதலுக்குள்ளாகி விழுந்துவிட்டார். அவரைக் காப்பாற்றச் சென்ற தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த நான்கு பேர்களோடு நானும் கடுமையாகத் தாக்கப்பட்டேன்.”
”காங்கிரஸ் சார்பில் யாருக்கும் காயமில்லையா?”
”இல்லை. அந்த போலீஸ்காரரை காங்கிரஸ்காரர்கள் தாக்குவதைப் படம் எடுத்துள்ளோம். அதை எங்கள் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளோம். இருந்தும் காயம்பட்ட எங்கள் மீதுதான் வழக்குப் போட்டுள்ளனர்.”
”ஏன் இப்படி ஓர் அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது?”
”திராவிடக் கட்சிகளின் துரோகத்தால் இந்த முடிவுக்கு நானும் என் போன்ற தோழர்களும் வந்தோம். எங்களை அடிமையாகவே வைத்திருக்க விரும்பும் திராவிடக் கட்சிகளைத் தமிழ் மண்ணைவிட்டு அப்புறப்படுத்துவதே எங்கள் திட்டம். யார் வேண்டுமானாலும் வாழலாம். தமிழர்கள் மட்டுமே ஆளலாம்.”
”உங்களின் தேர்தல் வாக்குறுதிகள்…?”
” ஒரே ஒரு வாக்குறுதிதான். தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 95(!) சதவிகித வேலை வாய்ப்புகளைப் போராடி வாங்கித்தருவோம். இது மட்டும்தான் எங்கள் தேர்தல் அறிவிப்பு. அதற்குப் பாடுபடுவதே எங்கள் நோக்கம்!”

















