கொழும்பு துறைமுக நகரத்திட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது.
சபையின் பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் நிலையியற் கட்டளை 23/2இன் கீழ் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுந்திருந்த போது கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக ஆளுந்தரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தயாரானார்.
”இரண்டு கேள்விகளுக்கு விரிவான பதில்கள் வழங்கப்படவிருப்பதால் நேரத்தைக் கருத்தில்கொண்டு அவற்றை சபாபீடத்தில் சமர்ப்பிக்கவா” என இதன்போது எதிர்கட்சித் தலைவரிடம் கேட்டார். ஆளுந்தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன.
இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க சபாபீடத்தில் சமர்ப்பிக்கும் அதேவேளை ஹன்சாட்டிலும் உள்ளடக்குமாறு கேட்டுக்கொண்டார். அத்துடன் துறைமுக நகரதிட்டம் விவாதத்திற்கு வரும்வரையில் அது தொடர்ந்தால் ஆராய்வதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
அதேவேளை அரசுக்கு எதிராக சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரம் தொடர்பாகவும் இதன்போது எதிர்கட்சித் தலைவர் கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் தினேஷ் குணவர்தன,
மேற்படி விடயத்தை ஏப்ரல் 8ஆம் திகதி விவாதிப்பதற்கு காலம் ஒதுக்கப்பட்டது. ஒரு நாளில் இரவு 2.30 மணிவரை விவாதிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.
எனினும் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் இரண்டு நாட்களை கோருவதால் மே மாதம் அது சாத்தியமாகும். இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விவாதமொன்றும் இருக்கின்றது என்றார்.

















