சந்திரிகாவின் அரசியல் சதுரங்க முயற்சி வெற்றிபெறுமா?

sandrikaஇத்தனை காலமும் இல்லாமல், அதுவும் மேல் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், குறிப்பாக பண்டார நாயக்கா பரம்பரையின் முக்கிய ஆதரவுப் பிரதேசமான கம்பஹா மாவட்டத்திலும் தேர்தல் பரப்புரைகள் சூடு பிடித்துள்ள

இந்த வேளையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, திடீரென்று எதிர்க் கட்சித் தலைவர் ரணிலை எதற்காகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்?

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தமது முயற்சி குறித்தல்லவா சந்திரிகா, ரணிலைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இவை, அண்மைய சந்திரிகா, ரணில் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்புக் குறித்து பொது மக்கள் தரப்பில் வெளியிடப்பட்டு வரும் விமர்சனங்களில் ஒரு சிலவாகும்.

இதே போன்றுதான் 2007 ஆம் ஆண்டில் கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்து அதனை ரணிலிடம் கையளிக்க மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் எடுத்துச் சென்றனர். அதிலிருந்து தொடங்கி, 2008 ஆம் ஆண்டில் அரசைப் பதவியிலிருந்து அகற்றும் திட்டமொன்றை அந்த மூவரும் இணைந்து வகுத்துக் கொண்டனர்.

ரணிலுக்கும் சந்திரிகாவுக்கும் இடையிலான அண்மைய சந்திப்பு அரசைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான திட்டத்தின் முன்னோடியா என்பது குறித்து தற்போது எதிர்வு கூற இயலாதுள்ளது.

சந்திப்பின் பின்னர் அது குறித்துக் கருத்து வெளியிட்ட சந்திரிகா, உண்மையில் தாம் ரணிலுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேச வில்லை எனக் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளாமல், இனங்களுக்கிடையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுடனும் பேச்சு வார்த்தை மேற்கொள்ள நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மத நல்லிணக்கம் என்ற விடயம் நாட்டின் இனங்கள் மத்தியில் சமூக, அரசியல் மற்றும் பண்பாடு என்பவற்றை ஒன்றிணைப்பதற்குப் பொருத்த மானதொரு தலைப்பாகும். இது தொடர்பாகத் தாம் ஏற்கெனவே மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் சந்திரிகா தெரிவித்திருந்தார்.

எதிர்காலத்தில் கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களையும் சந்தித்து அவரால் கலந்துரையாட இயலும். அதே போன்று எதிர்க் கட்சி அரசியல் வாதிகள் மட்டுமன்றி, அரச தரப்பின் சுதந்திரக் கட்சி சார்பான அமைச்சர்களையும் சந்தித்துப் பேச இயலும்.

அது மட்டுமன்றி நீதித்துறை, வைத்தியத்துறை, உட்பட்ட பல துறைகளைச் சேர்ந்த புத்தி ஜீவிகளை மட்டுமன்றி ஊடகத்துறையினரையும் சந்தித்துக் கலந்துரையாட இயலும்.
மத நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பான தமது முயற்சிகள் குறித்து வாராவாரம் சந்திரிகா ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்குவதைக் கண்டு ஜனாதிபதி மஹிந்தவின் மூளை சூடேறுகிறது.

சந்திரிகாவின் இத்தகைய சந்திப்புக்களை ஜனாதிபதி மஹிந்த வால் தடுத்து நிறுத்த இயலாதென்பது யதார்த்தம். மத நல்லிணக்கம் தொடர்பாகக் கலந்துரையாட சந்திரிகா சந்திப்பொன்றுக்காக கோரிக்கை விடுக்கும் போது, 1964இல் செய்த தில்லு முல்லுகளைப் போன்று மத நல்லிணக்கம் என்ற போர்வையில் அமைச்சர்களைத் தம் பக்கம் திருப்பிக் கொள்ள சந்திரிகா முயல்கிறாரா என்ற சந்தேகம் காரணமாகவே, சந்திப்புக்கான நேரத்தைக் குறித்தொதுக்கிக் கொடுக்காது மஹிந்த காலத்தை இழுத்தடிக்க எண்ணுகிறார் போலும்.

உண்மையில் மஹிந்த சந்திரிகா சந்திப்பு இடம்பெற்றால், அது உத்தியோக பூர்வ சந்திப்பாக மதிப்புப் பெறும். அதன் பின்னர் சந்திரிகா அமைச்சர்களைச் சந்திக்க முயன்றால் அதனை மஹிந்தவால் தடுத்து நிறுத்த இயலாது. அவ்விதம் சந்திரிகாவுடன் எந்த அமைச்சர்கள் பேசப் போகிறார்கள் என்பதை மஹிந்த கழுகுப் பார்வையுடன் அவதானித்து வருகிறார்.

இதனால் தான், தாம் விரும்பினாலும் கூட, சந்திரிகா வைச் சந்திக்க அமைச்சர்களுக்குப் பேய்ப் பயம். ஆனால் மத நல்லிணக்கம் என்ற விடயத்தை வைத்துக் கொண்டு அவர்களால் சந்திரிகாவைச் சந்தித்துச் சாவகாசமாகக் கலந்துரையாட இயலும்.
மதகுருமார், வைத்தியர், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற பண்டாரநாயக்காவின் பஞ்சமகாசக்திகளை மட்டுமல்லாது, நாட்டின் பல தரப்பட்ட அதிகாரத் தரப்புகளையும் சந்தித்து சந்திரிகா முன்வைக்கும் யோசனைகள் நாட்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் பெறக் கூடும்.

சந்திரிகா ஐ.தே.கட்சி அரசின் 17 ஆண்டுகள் கால தொடர் நிர்வாகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து 20 ஆண்டுகள் கழிந்து போய் விட்டுள்ளன. இந்த யோசனைகள் ஊடாகவே பொது வேட்பாளரொருவர் உருவாகக் கூடுமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாதுள்ளது.

சந்திரிகா இத்தகைய செயற்பாட்டை இன்று நேற்றுதான் செய்ய முயல்கிறார் என்றில்லை. 1994 ஆம் ஆண்டில் இதே போன்ற மார்ச் மாதமொன்றில் தென்பகுதி மக்களிடம் சென்று, சந்திரிகா ஆதரவு அலையை உருவாக்கி வைத்து, 17 ஆண்டுகளின் பின்னர் சுதந்திரக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வைக்க சந்திரிகா பெரு முயற்சி மேற்கொண்டார்.

தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி கண்ட சந்திரிகா அவ்வாண்டின் ஜூலை பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி ஆட்சியை வீழ்த்தி நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.

இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற அரசியல் மாற்றம் இது. தம்மை விட்டுக் கை நழுவிப் போன ஆட்சி அதிகாரத்தை மீண்டும் 2001 ஆம் ஆண்டில் சந்திரிகாவால் கைப்பற்ற முடிந்த போதிலும், உண்மையில் 2004 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் புதிதாகப் பொதுத் தேர்தலை அறிவித்த சந்திரிகா அவ்வாண்டு இதே போன்றதொரு மார்ச் மாதத்தில் தமக்கு அதிகாரத்தை வழங்குமாறு கேட்டு மீண்டும் நாட்டு மக்கள் முன் சென்றார்.

உண்மையில் தமது சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும் பறிகொடுத்து, மஹிந்தவை நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கப் போகும் அரசொன்றைத் தாம் நிறுவ நேருமென்று சந்திரிகா அந்த வேளையில் கனவில் கூட எண்ணியிருக்கமாட்டார்.

உண்மையில் 2004 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தைக் கலைக்காமல் சந்திரிகாவுக்கும் அப்போதைய பிரதமர் ரணிலுக்கும் இடையே நல்லிணக்க மொன்றை ஏற்படுத்தி தேசிய அரசொன்றை நிறுவும் முயற்சியாக சந்திரிகாவுக்கு நெருக்கமான மனோ தித்த வெலவுக்கும் ரணிலின் நம்பிக்கைக்கு உரிய மலிக் சமரவிக்ரமவுக்கும் இடையே பேச்சு வார்த்தையயான்று இடம்பெற்றது.

அதற்கு இந்தியாவும், அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடு களும் ஆதரவு தெரிவித்தன. அந்த வேளையில் பிரதமராயிருந்த ரணிலின் அரசிலிருந்து பாதுகாப்பு, பொலிஸ்துறை மற்றும் ஊடகத்துறை என்ற மூன்று அமைச்சுக்களை ஜனாதிபதி என்ற வகையில் சந்திரிகா தம்வசம் எடுத்துக் கொண்டிருந்தார்.

ஐ.தே.கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதை தாம் விரும்புவதாகவும், தம்மால் ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சி அரசிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட மூன்று அமைச்சுகளின் பொறுப்புக்களையும் உடனடியாக திருப்பி ஒப்படைக்க இயலாதெனவும், முதலில் பொலிஸ்துறை மற்றும் ஊடகத்துறை சார்ந்த அமைச்சுக்களைத் திருப்பி ஒப்படைப்பதாகவும், ரணிலுடன் இணைந்து சமாதான முயற்சிகள் குறித்து இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சையும் திருப்பி ஒப்படைப்பதாகவும், ரணிலுக்குத் தெரிவிக்குமாறு அவ்வேளையில் சந்திரிகா மலிக் சமரவிக்கிரமவிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால் ரணிலோ முதலில் சந்திரிகா தமது தவறைத் திருத்திக் கொண்டாக வேண்டுமென முரண்டு பிடித்தார். பேச்சு வார்த்தை முடிவடையவிருந்த அந்தச் சந்தர்ப்பத்தில், மங்கள சமரவீர, லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோரும் ஜே.வி.பி.யினரும் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுமாறு சந்திரிகாவுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

கடைசியில் அவர்களது குரலுக்குச் செவிசாய்க்க வேண்டிய நிலை சந்திரிகாவுக்கு ஏற்பட்டது. அன்று சந்திரிகாவுக்கும் ரணிலுக்குமிடையே இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தால் இன்று மஹிந்த ராஜபக்­சவால் இந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடிந்திருக்காது.

இந்த நாட்டின் பிரதமராகக் கூட பதவி வகிக்க வாய்ப்புக் கிட்டியிருந்திருக்காது. இன்றும் கூட அவர் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவராகவே செயற்பட நேர்ந்திருக்கும்.
அன்று சந்திரிகாவுக்கும் ரணிலுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை எதிர்த்த மங்கள சமரவீர தரப்பினர் தமது அந்த வரலாற்றுத் தவறுக்காக பின்னர் மனம் வருந்தினர்.

அந்த வரலாற்றுத் தவறு காரணமாகவே ஜே.வி.பி. இரண்டாகப் பிளவுற நேர்ந்தது.
சரி, தற்போது மத நல்லிணக்கம் என்பதன் ஊடாக சந்திரிகா அந்த வரலாற்றுத் தவறை நேர்சீர் செய்து கொள்ளப் போகிறாரா என்பதை ஊகிப்பதற்கான காலம் இன்னமும் கனியவில்லை.

சந்திரிகாவைச் சந்தித்த போது கட்சி என்ற ரீதியில் ஐ.தே.கட்சியால் இந்த நல்லிணக்க முயற்சியில் இணைந்துகொள்ள இயலாதுள்ளதாக ரணில் தெரிவித்து விட்டார்.

சந்திரிகா எதிர்பார்க்கின்ற போதிலும் ஐ.தே. கட்சியின் ஆதரவு அவருக்குக் கிட்டப் போவதில்லை என்பதையே ரணில் இவ்விதம் சொல்லாமல் சொல்லி வைத்திருக்கிறாரா என்பது குறித்து ரணில் மட்டுமே அறிவார். எது எப்படியாகிலும், 1994, 2004 ஆண்டுகள் போன்றே 2014 ஆம் ஆண்டும் சந்திரிகாவுக்கு அரசியலில் முக்கியத்துவம் மிக்கதொரு ஆண்டாக அமையக்கூடும்.

Tags: ,

Leave a Reply