ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் 26ஆம் திகதி சமர்ப் பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் ஜெனிவாவுக்குப் பயணமாகி யுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் தவிர்த்து ஏனைய உயர்மட்டக் குழுவினரே ஜெனிவாவுக்குச் சென்றுள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் தீவிர பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் ஜெனிவா சென்றுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் எதிர்வரும் 26ஆம் திகதி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினமே அது தொடர்பான விவாதம் நடைபெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்புப் பெரும்பாலும் எதிர்வரும் 28ஆம் திகதி நடை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தநிலையில் பிரேரணைக்கு ஆதரவு சேர்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் ஜெனிவா நோக்கிப் பயணமாகியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா லண்டனில் இருந்து ஜெனிவா பயணமாகியுள்ளார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் நேற்றுமுன்தினம் ஜெனிவாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மூன்று நாள்களுக்கு முன்னர் ஜெனிவாவில் இருந்து கொழும்பு திரும்பியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் நேற்று மீண்டும் பயணமாகியுள்ளதுடன், இவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் இருநாடுகளின் தலைநகரங்களுக்கு அவசர பயணம் மேற்கொள்கின்றனர். அங்கு அவர்கள் சில கலந்து ரையாடல்களில் பங்கேற்றபின்னர் ஜெனிவா பயணமாகவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஜெனிவா செல்வதற்கான பயண ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டிருந்த போதும் அது இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அவரது பயணம் அவசி யமில்லை என்று உணரப் பட்டதை அடுத்தே அது கைவிடப்பட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுபினர் எம். கே.சிவாஜிலிங்கமும் ஜெனிவாவில் தங்கியுள்ளார்.
ஜெனிவா பயணமாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள், இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணை தொடர்பில் ஐ.நா. உறுப்பு நாடுகளிடையே ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபடவுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















