ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 25ஆவது கூட்டத்தொடர் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கை அரசு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைள் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளன.
அமெ ரிக்க மற்றும் பிரிட்டன் இராஜதந்திரிகள் பிரேரணைக்கு ஆதரவு வழங்கக் கூடிய நாடுகளைச் சம்மதிக்க வைக்கும் இறுதிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே வேளை சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண் காணிப்பகம் போன்ற அமைப்புகளும் பிரேரணைக்கு ஆதரவு தேடும் முயற்சியில் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள பிரேரணைகள் தமிழ் மக்களின் எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்ற விமர்சனம் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் காணப்படுகின்ற போதும், பிரேரணை தோற்கடிக்கப்படுவது இலங்கை அரசை உற்சாகப்படுத்துவதாக அமைந்துவிடும் என்ற அடிப்படையில் பிரேரணை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் பணியில் அவர்களும் முழுமையாக ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, பிரேரணையைத் தோற்கடிக்கச் செய்வதற்கான இராஜதந்திர முயற்சிகளில் இலங்கை அரச தரப்பும், அவர் களது நட்பு நாடுகளும் மும் முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆயினும் இங்கு காணப்படும் தற்போதைய நிலைமைகள் அவர்களுக்குச் சாதகமாக இல்லை என்றே தெரிகின்றது.
இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், கைதுகள், தடுத்து வைப்புக்கள் என்பவை தொடர்பான செய்திகள் பிரேர ணைக்கு எதிராக வாக்களிக்க உறுப்பு நாடுகளைச் சம்மதிக்க வைப்பதில் தடையாக இருந்து வருகின்றன.
அதேவேளை இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப் பாட்டம் ஒன்று இன்று ஐ.நா. முன்றலில் புலம்பெயர் வாழ் சிங்கள மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்துக்காக இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் சுமார் மூவாயிரம் வரையான சிங்கள மக்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளையதினம் தமிழ் மக்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை அதேஇடத்தில் நடத்த உள்ளனர். கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திருமதி ஜெயகுமாரி பாலேந்திரன், அவரது மகளான 14 வயது விபூசிகா ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த ஆரப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

















