முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். W.புஷ் இன் ஆட்சிக் காலத்தில் இடம் பெற்ற ஆள் கடத்தல்கள், ரகசிய சிறைச்சாலைகள், சித்திரவதைகள் போன்றவற்றின் முழு விபரங்கள் அடங்கிய அமெரிக்க செனற் சபையின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்றதும், புரட்சிக் காரர்களெனவும், வன்முறையாளர்களெனவும் சந்தேகப் படுபவர்களைக் கடத்தி, ரகசியச் சிறைகளில் அடைத்து, சித்திரவதை செய்வதை நிறுத்தியதோடு, அன்றைய உண்மைகளை அறியவெனப் பின்னாளில் விசாரணைக் கொமிஷன் ஒன்று அமைக்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐஸ் நீரில் மூழ்கும்படி செய்தும், முகத்தையும், மூச்சுக் குழாய்களையும் துணியினால் மூடிக்கட்டி அதன் மேல் நீரை ஊற்றி, தண்ணீரில் மூழ்குவது போன்ற பயங்கர உணர்வை ஏற்படுத்தியுமென பல மனிதாபிமானமாற்ற முறைகளில் சந்தேகிக்கப் பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. சகல சந்தேகங்களும் தெரிந்தே மிகைப்படுத்தப்பட்டு, சந்தேகிக்கப்பட்டவர்கள் திட்டமிடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
4 வருடங்களாக 4 கோடி அமெரிக்க டொலர் பொருட் செலவில் நடாத்தப்பட்ட விசாரணை, 6300 பக்கங்களைக் கொண்ட நீண்ட அறிக்கையாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2009 இல் ஜனாதிபதி பறாக் ஒபாமா பதவியேற்றதும், மனிதாபிமானமற்ற கொடூரமான சித்திரவதைகள் செய்து விசாரணை நடத்தும் அமெரிக்க மத்திய புலனாய்வு அலுவலகத்தின் செயற்பாடு நிறுத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக் குழுவின் அறிக்கை, அமெரிக்க மத்திய புலனாய்வு அலுவலகத்திற்கும், அமெரிக்கப் பாராளு மன்றத்திற்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கையாளைப்பட்ட சித்திரவதைகளில் “வோற்றர் போடிங்” (Waterboarding) எனும் முறை மிகவும் வலி தருவதாகவும், எலும்புகளை முறியச் செய்து, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, மரணத்தை ஏற்படுத்துமென்பதும் கூறப்பட்டுள்ளது. முகத்தையும் மூச்சுக் குழாய்களையும் துணியால் மூடி சிறிதும் அசைய முடியாத இடத்தில் அடைத்து வைத்து, துணிமேல் நீரைத் தாரை, தாரையாக ஊற்றும் முறை “வோற்றர் போடிங்” சித்திரவதை என்பது குறிப்பிடத்தக்கது.

















