ஜெனீவா தீர்மானத்திற்கும் தென்னாபிரிக்க பயணத்திற்கும் தொடர்பில்லை

tnalogo2

தென்னாபிரிக்காவுடனான பேச்சுக்களின் போது தமிழர் தாயகங்களில் நிலவி வருகின்ற அசாதாரண சூழல் பற்றியே கூட்டமைப்பு பேசும். இப்பயணத்திற்கும் ஜெனீவா தீர்மானத்திற்குமிடையே எந்தவிதமதான தொடர்புகளுமில்லை என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவினால் இலங்கை விவகாரம் தொடர்பில் இரண்டு வருடங்களிற்கு முன்னதாக எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையினை தொடர்ந்தே இப்போதைய சந்திப்பு நடக்கவுள்ளது.

ஏற்கனவே இலங்கை அரசு தரப்பில் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சிலவா மற்றும் டக்ளஸை கொண்ட குழு தென்னாபிரிக்காவிற்கு பயணம் செய்து சந்திப்புக்களை நடத்தி திரும்பியுள்ளது.

முன்னதாக இலங்கை ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்கள் தொடர்பில் தென்னாபிரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து பொதுநலவாய மாநாட்டிற்கு வருகை தந்திருந்த அந்நாட்டு பிரதமர் எமது தரப்புடனும் கொழும்பில் பேச்சுக்களை நடத்தியிருந்தார். அத்துடன் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடந்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே கூட்டமைப்பு பிரதிநிதிகள் அங்கு செல்லவுள்ளனர். தமிழர் தாயகத்தில் இயல்பு வாழ்க்கை இல்லாமல் இராணுவ பிரசன்னம் கைதுகள் மற்றும் காணாமல் போதல்கள் தொடர்கின்ற நிலையில் இருதரப்பு பேச்சுக்கள் சாத்தியமற்றது என்பதை அங்கு சுட்டிக்காட்டுவோம்.

முதலில் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்த தென்னாபிரிக்காவிடம் கோருவோம். வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விவகாரம் காணாமல் போனோர் நிலை நில ஆக்கிரமிப்பு சிங்கள குடியேற்றங்கள் தற்போதைய கைதுகள் காணாமல் போதல்களென அவை பற்றியே தென்னாபிரிக்காவிற்கு முதலில் எடுத்து கூறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தென்னாபிரிக்கா இலங்கை விவகாரத்தை கையாளவென மட்டுமல்ல அத்துடன் சூடானில் யுத்த நிறுத்தத்தினை கொண்டுவரவெனவும் பாராளுமன்றினில் கூடி நபரொருவரை நியமித்துள்ளது. ஜெனீவாவில் கூட வாக்களிப்பினில் நடுநிலைமை வகித்திருந்தது.அத்துடன் எம்மை போன்று விடுதலைக்கு போராடிய அமைப்பென்ற வகையினில் அவர்களிற்கு யதார்த்தம் புரியுமென நம்புவதாகவும் சுரேஸ் மேலும் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply