ஜி.மெயிலில் எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் தெரியுமா..!

Gmail_logoஇன்றைக்கும் ஏதேனும் ஒரு புதுமையான வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஜிமெயில் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழங்கும் வசதியைத் தந்துள்ளது.

இந்தியா உட்பட 54 நாட்டில் உள்ளவர்களுக்கு, அவர்களின் மொபைல் போனுக்கு இதன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். கூகுள் இதற்கான ஒப்பந்தங்களை ஒவ்வொரு நாட்டிலும் மொபைல் சேவை வழங்கும் பெரும்பாலான நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ளது.

இந்த சேவை பயன்படுத்த கட்டணம் இல்லை; முற்றிலும் இலவசமே. ஆனால், மொபைல் சேவை வழங்குபவர்கள், எஸ்.எம்.எஸ். பெறுவதற்கு கட்டணம் வசூலித்தால், எஸ்.எம்.எஸ். பெறுபவர் அதனை மொபைல் சேவை நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டியதிருக்கும்.

இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் ஜிமெயிலில் உள்ள நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பரின் மொபைல் எண்ணை ஜிமெயில் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். செய்திக்கு, உங்கள் நண்பர் பதில் அனுப்பினால், அது ஜிமெயில் உரையாடல் (chat) பகுதியில் செய்தியாகக் கிடைக்கும்.

உங்கள் மொபைல் போனுக்குக் கிடைக்காது. மேலும் நீங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்ப முயற்சிக்கும் நேரத்தில், உங்கள் நண்பர் ஜிமெயிலைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உரையாடல் வசதியைப் பயன்படுத்தும்படி ஜிமெயில் அறிவுறுத்தும்.

இருப்பினும் நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். ஒவ்வொரு ஜிமெயில் பயனாளருக்கும், ஒவ்வொரு நாளும் 50 எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி தரப்படும். அனுப்பும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.க்கும் ஒன்று கணக்கில் கழிக்கப்படும். எஸ்.எம்.எஸ். பெறும் உங்கள் நண்பர், உங்களுக்குப் பதில் செய்தி அனுப்பினால், உங்கள் கணக்கில் மேலும் 5 அதிகரிக்கப்படும்.

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாததால், இவற்றின் மொபைல் எண்களுக்கு ஜிமெயில் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. ஏர்செல், ஐடியா, லூப் மொபைல், எம்.டி.எஸ்., ரிலையன்ஸ், டாட்டா டொகோமோ, டாட்டா இண்டிகாம் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம் பெற்றுள்ள மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Tags: , ,

Leave a Reply