இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பல்ல என கூறிக்கொண்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் நடத்தப்படும் ஆட்சேர்ப்பில் யாழ்.மாவட்டத்தின் கரவெட்டி பிரதேச செயலக பிரிவிலுள்ள 1350 இளைஞர் யுவதிகளிற்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாம். அவ்வாறு இணைத்துக் கொள்ளப்பட உள்ளவர்களது விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டதாக நல்லிணக்க மைய ஆணையாளர் என தன்னைக் கூறிக்கொள்ளும் எஸ்.செல்வா என்பவர் தெரிவித்துள்ளார்.
அங்கு பதிவு செய்வதற்காக 2 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் சென்றிருந்த போதும் போதும் அவர்களில் 1350 பேருக்கு மாத்திரம் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வுழமை போலவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதும் மாதாந்தம் 30,000 ரூபா வேதனம் வழங்கப்பட உள்ளதுடன், இந்த வேலை வாய்ப்புக்கள், இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மருத்துவதாதி, நடனபாட ஆசிரியர், சங்கீத பாட ஆசிரியர், ஆங்கில பாட ஆசிரியர், வாத்தியக் கலைஞர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், எழுதுநர்கள், அலுவலர்கள், கணினி இயக்குநர், விவசாய மேற்பார்வையாளர், விவசாய அலுவலர்கள், மின்னிணைப்பாளர், தச்சு வேலை, மேசன், வர்ணம் பூசுபவர்கள், ஒட்டு வேலை செய்பவர்கள், வாகனம் திருத்துவர்கள், வாகன வேலை செய்பவர்கள், வாகனத்திற்கு வர்ணம் பூசுபவர்கள், கூலி ஆட்கள், மற்றும் கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்ட வேலைகளுக்கே ஆட்கள் சேர்க்கப்படவுள்ளதாக படைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு வழங்கப்படுவதற்காக இளைஞர் யுவதிகளிடமிருந்து பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன்; அவர்கள் பின்னர் தப்பி செல்வதனை தடுக்க கல்வித் தகமை உள்ளிட்ட ஆவணப்பத்திரங்களின் மூலப் பிரதிகள் படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்பகுதி கிராம சேவையாளர்கள் ஊடாகவே ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதும் பிரதேச செயலாளர் சிவசிறீ என்பவர் தமக்கு ஏதுமே தெரியாதென தெரிவித்துள்ளார். ஏற்கனவே வன்னியில் இதே பாணியில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டிருந்தது. எனினும் படைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் காட்டப்பட்டுவரும் விமர்சனங்களையடுத்து படைத்தரப்பின் ஏனைய பிரிவிற்கான ஆட்சேர்ப்பு எனும் புதிய நாடகம் அரங்கேற தொடங்கியுள்ளது.
















